உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு வில்லனாகும் வட கொரியா
அமெரிக்க போர்க்கப்பலை எதிர்த்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட தயாராக இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. உலக நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் எதிர்ப்பை மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை அமெரிக்காவும், ஐ.நா சபையும் விதித்துள்ளன. ஒருவித பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா தன்னுடைய போர்க் கப்பலை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி இருப்பதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க போர்க் கப்பலை மூழ்கடித்து அழித்துவிட தயார் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம் வட கொரிய படையின் பலத்தை உலகம் அறியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
See More
பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 38 இந்தியர் கைது
பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கி, வேலைபார்த்துவந்த 38 இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளராக தகவல் வெளியாகியுள்ளது. ஈஸ்ட் மிட்லாண்ட் பகுதியில் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கி வேலைபார்த்து வருவதாக, பிரிட்டன் குடிவரவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த்தை அடுத்து, அங்குள்ளோர் ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சிக்கிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர், 38 இந்தியர் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்து செய்து வருவதாக தகவல் அளித்த பின்னர் இந்த கைது நடவடிக்கை தொடங்கியுள்ளது. விசா மோசடி கற்றத்திற்காக அவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
See More
நாடு முழுவதும் மதுவுக்கு தடை விதித்தால் முன்னேற்றம் சாத்தியம் – நிதிஷ் குமார்
இந்திய முழுவதும் மதுவுக்கு தடை விதித்தால் மட்டுமே நம்முடைய நாட்டில் முன்னேற்றம் ஏற்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஒருங்கிணைந்த ஜனதா தள கட்சியின் தொடக்க விழாவில் பேசியபோது, பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதை போலஇந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மதுவிலக்கு விவகாரத்தில் எல்லா மதங்களும் ஒருமித்த கருத்துடன் திகழ்வதால், உடனடியாக நிறைவேற்ற அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதன்மூலம் நாட்டின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தம், பிரிவினை ரீதியான மோதல்கள் ஆகியவை தடுக்கப்படும் என்று அவர் பேசியுள்ளார்.
See More
இந்தி மொழியில் கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் வசதி
இணையம் மூலம் கடவுச்சீட்டுக்கு (பாஸ்போட்) விண்ணப்பிப்பவர்கள் ஹிந்தி மொழியில் விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பலாம் என்று இந்திய நடுவண் அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடவுச்சீட்டு பெற ஆங்கிலம் தெரியாதவர்கள் வசதிக்காக ஹிந்தி மொழியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். இணையத்தில் ஹிந்தி மொழியில் தயாரிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை, பதிவிறக்கி நிரப்பி பயன்படுத்தலாம். பாஸ்போர்ட் அலுவலகங்களில் விண்ணப்பிப்போர், இந்த வசதியை பயன்படுத்த முடியாது. ஹிந்தி மொழி விண்ணப்பங்களை பரிசீலிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
See More
டெல்லியில் 41 நாட்கள் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்
வங்கி கடன்கள் ரத்து, நிவாரண உதவி, வயதான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் ஜன்தர் மந்தர் பகுதியில் போராடி வந்தனர். அரை நிர்வாண போராட்டம், நிர்வாண போராட்டம், தலைமுடியை பாதி மழித்து போராட்டம், பாதி மீசை மழித்து போராட்டம், மொட்டையடித்து போராட்டம், சேலைக் கட்டி போராட்டம், உடலில் கோரிக்கைகளை எழுதி வைத்து போராட்டம், சாலையில் உருண்டு போராட்டம், கர்ணம் அடித்து போராட்டம், மண்சோறு சாப்பிட்டு போராட்டம், ரத்தத்தால் கோரிக்கையை எழுதி போராட்டம், எலியை கடித்து போராட்டம், விவசாயிகள் எலும்புக்கூடு சுமந்து போராட்டம், மோடி விவசாயிகளை சாட்டையால் அடித்து துன்புறுத்தும் போராட்டம் என்று நாளுக்கொரு நூதன வடிவத்தில் போராட்டம் சூடுபிடித்து வந்தது. இந்த விவசாயிகள் துன்புறுவதை பார்த்து பலரும் சமரசம் மேற்கொண்டனர். நாளுக்கு நாள் விவசாயிகளுக்கு மக்களின் ஆதரவும் அதிகரித்து வந்தது. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து, ஏப்ரல் 25 ஆம் நாள் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திமுகவின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதற்கு போராட்டம் நடத்திய விவசாயிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர்கள் மாநாட்டிற்கு வந்திருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காலை 7.30 மணிக்கு இந்த விவசாயிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை தலைமையமைச்சரிடம் எடுத்துக்கூறுவதாக வாக்களித்தார். ஆனால், விவசாயிகள் எதிர்பார்த்திருந்த தலைமையமைச்சரை சந்திப்பது நடைபெறவே இல்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற எவ்வித உறுதியும் வழங்கப்படவில்லை. என்றாலும், 41 நாளாக நடத்தி வந்த இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்த விவசாயிகள் தெரிவித்துவிட்டு தமிழகம் திரும்பியுள்ளனர். நாட்டுக்கே சோறுபோடும் விவசாயிகளின் நிலைமையை தலைமையமைச்சர் அவர்களை சந்தித்து, சற்றுநேரம் கேட்கும் நிலைமை கூட ஏற்படவில்லையே. இந்திய விவசாயிகளின் உண்மையான நிலைமையின் வெளிப்பாடு இதுதான் என்று ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளர்.
See More
ராணுவ சீருடையில் தீவிரவாதிகள் தாக்குதல், 100க்கு மேலானோர் பலி
ஆப்கானிஸ்தான் ராணுவ முகாம் மீது தலிபான்கள் நிகழ்த்திய கொடிய தாக்குதலில், 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். வெள்ளிக்கிழமையன்று அந்நாட்டின் வடக்கே உள்ள மசார் இ ஷரீஃப் என்ற இடத்தில் இயங்கிவந்த ராணுவ வீரர்கள் முகாம் மீது ராணுவ சீருடையில் திடீரென புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். இந்த முகாமை நேரில் சென்று பார்வையிட்ட அதிபர் அஷ்ராப் கானி, இந்த தாக்குதல் மனித குலத்திற்கும், இஸ்லாமிய போதனைகளுக்கும் எதிரானது என்று கண்டித்துள்ளார்.
See More
மாட்டுச்சாணத்தில் இருந்து உயிரிஃபேப்ரிக் துணி அறிமுகம்
மாட்டுச்சாணத்திலிருத்து எடுக்கப்பட்ட பயோஃபேப்ரிக் துணிகளால் தைக்கப்பட்ட ஆடைகளை தனியார் நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. . நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மெஸ்டிக் நிறுவனம் மாட்டுச்சாணத்தில் ஆடை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. இறுதியில், பயோஃபேப்ரிக் என்ற ஆடையை நெய்வதற்கான மூலப்பொருளை சாணத்திலிருந்து வெற்றிகரமாக எடுக்க வழி கண்டுபிடித்துள்ளது. உலர் சாணத்திலிருந்து செல்லுலோஸ் பொருளை மட்டும் முதலில் எடுத்து, புதிய ஈரமான சாணத்தில் இருக்கும் வேதி திரவங்களை மீண்டும் செல்லுலோஸ் உடன் சேர்த்து பயோஃபேப்ரிக் தயாரிக்கப்படுகிறது. இதே முறையில் தான் மாட்டுச்சாணத்திலிருந்து உயிரி பிளாஸ்டிக் மற்றும் காகிதங்களும் தயாரிக்கப்படுகின்றன. அதனையே துணிகள் தயாரிக்கவும் பயன்படுத்திய மெஸ்டிக் நிறுவனம் வெற்றிக்கனியை சுவைத்துள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த பயோஃபேப்ரிக் ஆடைகள் கடைகளில் விற்பனை செய்வது துவங்கும் என்று தெரிகிறது.
See More
ஹரியானா: கர்ப்பிணி பெண்களின் விழிப்புணர்வுக்கு செல்போன் செயலி
கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஸ்மார்ட்ஃபோன் செயலி ஒன்றை, ஹரியானா மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. ஹரியானா அரசு #Kilkari என்ற செயலியை இதற்காக உருவாக்கியுள்ளது. கர்ப்பிணி பெண்கள் மேற்கொள்ள வேண்டிய உணவுமுறைகள், மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்டவை பற்றி அவர்களுக்கு, சீரான கால இடைவெளியில் அவ்வப்போது நினைவுபடுத்தக்கூடிய வகையில் இந்த செயலி செயல்படுகிறது. பிரசவத்திற்குப் பிறகும், குழந்தைகளின் வயது ஓராண்டு முடியும் வரை, தேவையான மருத்துவ அறிவுரைகளை இந்த செயலியே, வழங்கும் என்றும், தெரிவிக்கப்படுகிறது.
See More
ஏழு மாவட்டங்களில் ஃபாரன்ஹீட் அளவில் சதத்தை தாண்டும் வெப்பம்
தமிழகத்தில் வேலூர், சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் சில இடங்களில் சனிக்கிழமை 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் உச்சம் அடைந்து வருகிறது. சனிக்கிழமை வெப்பத்தின் தாக்கம் 14 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி அதிகரித்து காணப்பட்டது. தமிழக மாவட்டங்களான வேலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், மதுரை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்து 104 முதல் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் இருக்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். சனிக்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி,100க்கு அதிமாக பல இடங்களில் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
See More
வரி ஏய்ப்பு மோசடியில் சிக்கியது கோகுலம் நிதி நிறுவனம்
கோகுலம் நிதி நிறுவனம் 1100 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கோகுலம் நிதி நிறுவனம், சுமார் 1500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமானவரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. எனவே, நான்கு நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வரும் கோகுலம் நிதி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் உள்ளிட்ட 80 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் 400 வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இன்று நண்பகல் நிறைவடைந்துள்ள இந்த சோதனையில் 1100 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்றாலும், அதை வரவு வைக்காமல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றத்தை ஒப்புக் கொண்ட கோகுலம் நிதி நிறுவன உரிமையாளர்கள், 1100 கோடிக்கான வருமான வரியை செலுத்தி விடுவதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது.
See More