உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

உலக செய்திகள்

கிளிநொச்சியில் கண்ணீருடன் திரண்ட காணாமல்போனோரின் உறவுகள்
காணாமல் போனோரின் உறவினர்களால் இன்று காலை கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. கடந்த பல ஆண்டுகளாக சிறிலங்கா அரசாங்கங்கள் மற்றும் ஒட்டுக்குழுக்களின் போர், வெள்ளை வான்கடத்தல்கள், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பெரும்போர் என்பவற்றின்போது கடத்தப்பட்டும் காணாமல் போயும், இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயும் உள்ள உறவுகளின் உறவுகளும் பல ஆண்டுகளாக அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் சொந்தங்களும் இன்று கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட காணாமல் போனோரின் உறவுகளின் அமைப்பு ஏற்பாடு செய்த இதில் பெருமளவான காணாமல் போனவர்களின் உறவுகளும் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் உறவுகளும் கலந்துகொண்டு கண்ணீர் சிந்தி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். பெரும்பாலான கோசங்கள் மாற்றத்திற்கான புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை நோக்கியே எழுப்பப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து தமக்கு நிம்மதியான வாழ்வுக்கான தீர்வை தருவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே காணாமல் போன உறவுகளின் நம்பிக்கை குரல்கள் இடம்பெற்றிருந்தன. கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக ஒன்று திரண்டவர்கள் பின்பு கிளிநொச்சி மாவட்ட அரசசெயலகத்தை நோக்கிச்சென்று அங்கு தமது கோரிக்கைகளை முன்வைத்த மகஜரை வாசித்து, ஜனாதிபதிக்கான மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்ததுடன் வடமகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரனுக்கான மகஜரை பா.உறுப்பினர் சி.சிறீதரனிடம் கையளித்தனர்.
See More
அக்னி 5 ஏவுகணை சோதனை: இந்தியாவின் மகத்தான சாதனை
சுமார் 5 ஆயிரம் கிலோமீற்றர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் சக்திவாய்ந்த அக்னி 5 ஏவுகணை ஒடிஷாவின் வீலர் தீவில் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தின் சார்பில் அதிநவீன ஏவுகணையாக அக்னி 5 வடிவமைக்கப்பட்டது. 50 டன் எடை கொண்ட அக்னி 5 ஏவுகணை, 5 ஆயிரம் கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் சக்தி வாய்ந்தது. இந்த ஏவுகணை ஒடிஷா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து இன்று காலை 8.09 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்முறையாக கேனிஸ்டர் எனும் எளிதில் ஏவக்கூடிய சாதனம் மூலம் ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டுள்ளது. எல்லையில் இருந்து இந்த ஏவுகணையை ஏவினால் அது சீனாவின் மேற்கு பகுதியை தாக்கும் அளவுக்கு திறன் வாய்ந்தது. அக்னி 5 ஏவுகணையை ராணுவத்தில் சேர்க்க இன்னும் 2 ஆண்டுகளாவது ஆகும். ராணுவத்தில் அக்னி 1, அக்னி 2, அக்னி 3 ஆகிய ஏவுகணைகள் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அக்னி 4 ஏவுகணை 4 ஆயிரம் கிலோமீற்றர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் வல்லமை வாய்ந்தது. அக்னி 4 மற்றும் அக்னி 5 ஏவுகணைகளை மேலும் சக்திவாய்ந்ததாக ஆக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
See More
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் புதிய யோசனை
இலங்கைக்கு எதிராக மற்றுமொரு யோசனையை ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இந்த யோசனையை சமர்பிக்க அமெரிக்கா உத்தேசித்துள்ளது. 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் தொடர்ச்சியாக இந்த புதிய யோசனை அமையும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இவர் தனது விஜயத்தின் போது இலங்கையின் உயர்மட்ட தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கொழும்பில் நடைபெறும் முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் பிஸ்வால், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இலங்கை விஜயத்தை முடித்து கொள்ளும் துணை ராஜாங்க செயலாளர் எதிர்வரும் 3 ஆம் திகதி பிரித்தானியா நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளார். இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட உள்ள யோசனை குறித்து அவர் பிரித்தானிய அரசாங்கத்துடன் கலந்துரையாட எண்ணியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் ஜெனிவா சென்றும் அவர் இந்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.
See More
அண்டை நாடுகளுடன் நல்லுறவை தொடரவே விருப்பம்
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்தோ - திபெத்திய எல்லை காவல் படை பிரிவின் முகாமை தொடங்கி வைத்த அவர் பேசியதாவது, சீன - இந்திய எல்லை நெடுகிலும் உணர்வு அடிப்படையிலான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. சீ னாவுடனான எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். சீனாவுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் அமைதி வழியில் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது. இந்திய வரலாற்றில் இருந்து இந்தியா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். நமது நாடு அமெரிக்காவுடனும், பிற நாடுகளுடனும் கொண்டுள்ள உறவை மேம்படுனத்த விரும்புகிறது. நமது அண்டை நாடுகளுடனான உறவையும் மேம்படுத்த வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை ஆகிய நாடுகள் அனைத்தும் நமது குடும்பத்தின் ஒரு பகுதியாகும். அண்டை நாடுகளுடனும் நல்லுறவை தொடரவே இந்தியா விரும்புகிறது என்றார். இந்தோ- திபெத்திய எல்லை காவல் படையினருக்காக புதிதாக 35 எல்லை சாவடிகள் அமைப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது. இதில் 22 சாவடிகள் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் எஞ்சிய 13 எல்லை சாவடிகளை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
See More
அரசு நிர்வாகத்தில் ராகுல் தலையீடு ? ஜெயந்தி நடராஜன் போட்டு உடைத்தார்; கட்சியில் இருந்து விலக முடிவு
சென்னை: மத்திய அரசு நிர்வாகத்தில் காங்., துணை தலைவர் ராகுலின் தலையீடு இருந்தது என்றும் , அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் தங்களை பல திட்ட அனுமதியில் நிர்பந்தித்தார்கள் என்றும் கடந்த காங்., அமைச்சரவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் புழுதி வாரி இறைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் யாரும் இது வரை போடாத புதிய குண்டை போட்டு ராகுலின் இமேஜை வெகுவாக குறைத்துள்ளார் என்றே சொல்லலாம் . ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன். இவர் கடந்த 2013ல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியில் கொடுக்கப்பட்ட நிர்பந்தம் காரணமாகவே அவர் பதவியை இழக்க நேரிட்டது என்று கூறப்பட்டது. மேலும் இவர் துறையில் ஊழல் மலிந்து இருந்தது என்றும் பேசப்பட்டது. ஆனால் இதனை பூசி மெழுகி கடந்த 2014 நவம்பர் மாதம் ஜெயந்தி அளித்த பேட்டியில் கட்சி பணியில் என்னை ஈடுபடுத்த காங்., தலைமை விரும்புகிறது; இதனால் நான் அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜெயந்தி காங்., தலைவர் சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் தான் அமைச்சராக இருந்தபோது தமக்கு ராகுல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து நெருக்கடி வந்தது என்றும், இதனால் தன்னால் அப்போது சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தாம் அவமானப்படுத்தப்பட்டேன் என்றும் அந்த கடிதத்தில் ஜெயந்தி கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காங்., கட்சியில் இருந்து விலகும் தனது முடிவை சென்னையில் இன்று நடக்க உள்ள நிருபர்கள் சந்திப்பில் அறிவிக்கவுள்ளார். பா.ஜ., தரப்பில் கருத்து : இது குறித்து மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது: ஜெயந்தியின் கடிதம் மூலம், கடந்த ஆட்சியில் ராகுலே கொள்கைகளை முடிவு செய்துள்ளார் என்றும், காங்., ஆட்சி காலத்தில் காலதாமதம் காரணமாக பல்வேறு திட்டங்கள் முடங்கி, இந்திய பொருளாதாரம் பின்னுக்கு சென்றது என்பதற்கு ஜெயந்தியின் கடிதமே சான்று என கூறியுள்ளார். காங்., ஆட்சியின் உண்மை நிலை தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார். வாசன் விலகல் காங்கிரசில் மூப்பனார், காமராஜர் புகழ் புறக்கணிக்கப்பட்டது என காரணம் கூறி தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே., வாசன் ஏற்கனவே கட்சியில் இருந்து விலகியிருக்கும் இந்நேரத்தில் ஜெயந்தியும் தனது ராஜினாமா முடிவை எடுத்துள்ளார். இவர் வாசன் தலைமையிலான புதிய கட்சியில் சேருவார் அல்லது பா.ஜ.,வில் சேருவார் என்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
See More
நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த தியாகிகள்
விடுதலைக்காக அயராது பாடுபட்டு, இன்னுயிரை தியாகம் செய்த போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. தேசத்தந்தை மகாத்மா காந்தி மறைந்த ஜனவரி 30ம் திகதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இதன் நோக்கம். இன்று இந்தியா முழுவதும் காலை 11 மணிக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது. பிரதமரின் அஞ்சலி அஞ்சலி செய்தி வெளியிட்டுள்ள அவர்,” மரியாதைக்குரிய மகாத்மா காந்திக்கு என் அஞ்சலியை செலுத்திக்கொள்கிறேன்”. மேலும், தியாகிகள் தினமான இன்று நாட்டுக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த ஓவ்வொரு தியாகிகளுக்கும் எனது அஞ்சலி செலுத்திகொள்கிறேன். அவர்களின் வீரமும் துணிச்சலும் எப்போதும் ஊக்குவிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
See More
இலங்கை மீதான தடையை விரைவில் நீக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி
இலங்கை உரிய ஒழுங்கு செயற்பாடுகளை எடுக்குமானால், இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடையை விரைவில் நீக்கமுடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைத்து, பெல்ஜிய உதவி பிரதமர் டிட்லர் ரேய்டெர்ஸ் உட்பட்டவர்களை சந்தித்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்படடுள்ளது. மங்கள சமரவீர, ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றாடல் துறை ஆணையாளர் கர்மெனு வெலாவையும் சந்தித்தார். இதன்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்வது தொடர்பிலும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. தொடர்புடைய செய்தி- இலங்கை மீன் மீதான தடையை நீக்க கால தாமதாகும்: ஐரோப்பிய ஒன்றியம்
See More
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மனித கண்காணிப்பகம் வரவேற்பு
இலங்கையின் புதிய அரசாங்கம், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. கண்காணிப்பகம், நேற்று நியூயோர்க்கில் வெளியிட்ட அறிக்கையில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. 656 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் முன்னைய இலங்கை அரசாங்க காலத்தில் இடம்பெற்ற அனைத்துவித மனித உரிமைமீறல்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பது அவசியம் என்று கண்காணிப்பகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கென்னத் ரொத் வலியுறுத்தியுள்ளார். தமது அறிக்கை தயார்ப்படுத்தப்பட்ட பின்னரே இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த அரசாங்கம் எடுத்துள்ள சில நடவடிக்கைகள், காத்திரமானவையாகும் என்று கண்காணிப்பகம் குறி;ப்பிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை மீண்டும் இயங்கச் செய்தமை, 2009இல் கொல்லப்பட்ட செய்தியாளர் லசந்த விக்கிரமதுங்க தொடர்பில் விசாரணைகளை மீண்டும் முன்னெடுக்கின்றமை போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்குகின்றன. இதற்கிடையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்க காலத்தில் போர்க்குற்றம் தொடர்பில் உரிய விசாரணை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. இதனையடுத்து ஐக்கிய நாடுகளால் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டது. எனினும் அந்த விசாரணைகளை இலங்கையின் முன்னாள் அரசாங்கம் முற்றாக நிராகரித்து வந்தது. இதேவேளை போருக்கு பின்னர் இடம்பெற்ற மீள்குடியேற்றங்களின்போது தமிழர்களின் நிலங்கள் பாதிக்கப்படுகின்ற வகையில் ராஜபக்சவின் அரசாங்கம் செயற்பட்டதாகவும் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டிள்ளது.
See More
சச்சின் இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி
உலக கிண்ண அரங்கில் முதன் முறையாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது. உலக கிண்ண(50 ஓவர்) வரலாற்றில் இந்திய அணி தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு, நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரின் பங்கு மிகப்பெரியது. 1992ம் ஆண்டில் சிட்னியில் நடந்த உலக கிண்ணத் தொடரில், 19வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக களம் கண்டார், இதில் அரைசதம்(54*) விளாசினார். பின் 1996(31, சிட்னி), 1999 (45, மான்செஸ்டர்), 2003 (98, செஞ்சுரியன்), 2011 (85, மொகாலி) என அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார். இந்நிலையில் கடந்தாண்டுடன் சச்சின் ஓய்வு பெற்ற நிலையில், வருகிற உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கமுடியாது. இந்த தொடரில் முதன் முறையாக சச்சின் இல்லாமல் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.
See More
ஏர் ஏசியாவின் 92 சடலங்களை கண்டுபிடிக்க முடியவில்லையே….. தவிக்கும் கடற்படையினர்
ஜாவா கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான ஏர் ஏசிய விமானத்தில் 92 பேரின் சடலங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அனைவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து நடந்த மீட்பு பணியில் இதுவரை விமான விபத்திலிருந்து 70 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 92 பேரின் உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கடலில் ஆழத்தில் சிக்கியுள்ள விமானத்தின் உடல் பகுதியையும் மீட்க முடியவில்லை எனவும் கடற்படையினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த 81 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது மீட்புப் பணி நிறுத்தப்பட்டிருப்பதாக இந்தோனேசிய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
See More