உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

இலங்கை செய்திகள்

வெளிநாட்டில் இன்னல்களை எதிர்நோக்கிய இலங்கை பெண்கள் நாடு திரும்பினர்!
மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்த 52 இலங்கைப் பெண்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தலையீட்டில் குறித்த இலங்கைப் பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 70 பேர் உள்ளடங்கிய இரண்டாவது பணிப் பெண்கள் குழுவினரும் இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் இலங்கை பணிப்பெண்களை, நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
See More
சிங்கள இளைஞர்கள் ஆவேசம்! எது வேண்டுமானாலும் நடக்கலாம் என எச்சரிக்கை
சிங்கள இளைஞர்கள் அனைவரும் ஆவேசமாக இருக்கின்றனர். இனிமேல் என்ன நடக்கும் என்பது தெரியாது என பொதுபல சேனாவின் ஜபுரேவல சந்தரதன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் நேற்று இடம் பெற்ற ஊர்வலத்தின் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், நாட்டில் பௌத்தம் அழிந்து கொண்டு வருவதாக ஜனாதிபதி உட்பட பல அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனினும் அதற்காக கருத்து தெரிவிக்கும் எம்மை இனவாதிகளாக சித்தரித்து விட்டார்கள். மேலும், வடக்கில் விக்னேஸ்வரன் தனி ஈழத்தினை இலங்கை வரைபடத்தில் அமைத்துக் கொண்டு வெற்றியை கொண்டாடுகின்றார், விஜயகலா பிரிவினைவாதக் கருத்துகளை வெளிப்படுத்துகின்றார். சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகளை நினைவு கூர்ந்து கொண்டு வருகின்றார், அசாத்சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் உட்பட பலரும் இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு எதிராக நாட்டின் நீதி செயற்படவில்லை. ஆனால் ஞானசார தேரர் பௌத்தத்திற்காக கருத்து வெளியிடும் போது அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த சமயத்தில் நாம் ஒன்றைக் கூறிக்கொள்கின்றோம் இனி நாம் எதனையும் பேச மாட்டோம். ஆனால் நாம் நாட்டில் இனவாதம் பரப்பும் அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளோம். அவர்கள் அனைவரையும் கைது செய்யவேண்டும். அவ்வாறு கைது செய்தால் ஞானசாரர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம். அதனைச் செய்யாது இதே வகையில் பிரச்சினை தொடருமானால் அதனால் விளைவுகள் பாதகமாக அமையும். சிங்கள இளைஞர்கள் மிகுந்த ஆவேசத்தில் உள்ளார்கள் அதன் காரணமாக அடுத்தது எது வேண்டுமானாலும் நடக்கலாம். என்ன நடக்கும் என்பது எமக்கு தெரியாது என பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கின்றோம் எனவும் சந்தரதன தேரர் தெரிவித்துள்ளார்.
See More
35 வயதுக்கு குறைந்தவர்கள் முச்சக்கர வண்டியை செலுத்த தடை!
அண்மைக்காலமாக இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான சட்டம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் 35 வயதிற்கு அதிகமானவர்களுக்கு மாத்திரமே இனி வரும் காலங்களில் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் முன்வைத்த யோசனைகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானத்திற்கு முன் வந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் முச்சக்கர வண்டிகளினால் ஏற்படுகின்ற விபத்துகளின் அதிகரிப்பு காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
See More
ஜனாதிபதி மைத்திரியால் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம்
பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பதிவிடுவோரை தண்டிக்கும் வகையில் சட்டங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை வழங்குவதற்கு அவசியமான சட்டத்திட்டங்களை வெகு விரைவில் கொண்டு வரவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை கூறியுள்ளார். யார் எதிர்ப்பு வெளியிட்டாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிய ஜனாதிபதி, இந்தியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் இந்த சட்டத்திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். வலைத்தளங்கள் ஊடாக சேறு பூசுதல், அவமதித்தல், போலி பிரச்சாரம் முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சில அரச ஊடகங்கள் தற்போது வரையில் வேறு நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுவதாகவும், அவற்றினை எதிர்வரும் காலங்களில் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
See More
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நால்வர் கைது
திருகோணமலை முதலிகுளம் பிரதேசத்தில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலிகுளம் (மொரவெவ) பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிட்ட போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முச்சக்கர வண்டியிலிருந்து இலங்கையில் தயாரிக்கப்பட்ட கல்கட்டாஸ் ரக துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திருகோணமலை மற்றும் கித்துல்உந்துவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
See More
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர் ஒருவரும் மாவட்ட அமைப்பாளர் ஒருவரும் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். அந்தவகையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மிஹிந்தலை தொகுதி அமைப்பாளராக வடமேல் மாகாண சபை அமைச்சர் சரத் இலங்க சிங்கவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அநுராதபுர மாவட்ட அமைப்பாளராக வடமேல் மாகாண சபை அமைச்சர் சுசில் குணரத்னவும் ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் ஒழுக்கம் தொடர்பில் கலந்துரையாடல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் கட்சியின் ஒழுக்கம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இதன்போது எதிர்வரும் தேர்தல்களுக்கு செல்லும் நிலையில் கட்சியின் ஒழுக்கம் அவசியம் என்பதை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இந்தக்கூட்டம், ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் முன்னர் இந்தக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்ற கோரிக்கையும் முன்னதாக முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த கூட்டத்தின் போது அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டமைக்கு மத்தியக்குழு கூட்டத்தில் மகிழ்ச்சி வெளியிடப்பட்டது.
See More
முஸ்லிம்கள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் எதிர் தாக்குதல் நடத்தியதில்லை
நாட்டில் நடைபெரும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலை அமெரிக்க தூதரகம் கண்டித்திருப்பதை முஸ்லிம் உலமா கட்சிகளும் இஸ்லாமிய இயக்கங்களும் பகிரங்கமாக வரவேற்க வேண்டும் என்று உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்கால‌ங்க‌ளில் சிறுபான்மையின‌ர் மீது ந‌ட‌த்த‌ப்ப‌டும் தாக்குத‌ல்க‌ளுக்கு அர‌சாங்க‌மே பொறுப்புக்கூற‌ வேண்டுமென‌வும் இல‌ங்கையிலுள்ள‌ அமெரிக்க‌ தூதுவ‌ர் அதுல் கெஷாப் த‌ன‌து டுவிட்ட‌ரில் தெரிவித்துள்ள‌மை நொந்து போயிருக்கும் முஸ்லிம்க‌ளுக்கு ஓர‌ள‌வு ஆறுத‌ல் த‌ரும் விட‌ய‌மாகும். அமெரிக்க‌ தூதுவ‌ரின் இக்க‌ண்ட‌ன‌ம் மிக‌ச்சிற‌ந்த‌ எடுத்துக்காட்டாக‌ இருக்கும் அதேவேளை முஸ்லிம் நாடுக‌ள் வெளிப்ப‌டையாக‌ த‌ம‌து க‌ண்ட‌ன‌ங்க‌ளை தெரிவிக்காம‌ல் இருப்ப‌து க‌வ‌லை த‌ருவ‌தாக‌வும் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் தெரிவித்துள்ளார். இல‌ங்கை முஸ்லிம்க‌ள் இன்று வ‌ரை எந்த‌வொரு ப‌ய‌ங்க‌ர‌வாத‌ செய‌ல்க‌ளிலும் ஈடுப‌ட‌வில்லை. ஒரு பௌத்த‌ ப‌ன்ச‌லைக்கேனும் க‌ல் வீசிய‌தில்லை. முஸ்லிம்கள் மீது ப‌ல‌ தாக்குத‌ல்க‌ள் தொடுக்க‌ப்ப‌ட்ட‌ போதும் இன்று வ‌ரை எதிர் தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌தில்லை. அந்த‌ள‌வுக்கு பொறுமையாக‌ இருக்கும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ அர‌ச‌ பின்புல‌த்துட‌ன் தாக்குத‌ல்க‌ள் மேற்கொள்ள‌ப்ப‌டுவ‌து க‌ண்டிக்க‌த்த‌க்க‌தாகும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
See More
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளை கட்டுபடுத்துமாறு கோரிக்கை
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள இனவாத சூழல் முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பதற்றமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. ரமழான் மாதம் நெருங்கும் வேளையில் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதானது முஸ்லிம்களது மத அனுஷ்டான விடயங்களுக்கு மிகவும் பாதிப்பதாக அமையும். எனவே, இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த நல்லாட்சி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் நல்லாட்சிக்கு அரசுக்கு விசேட பொறுப்புள்ளது. தமது மத அனுஷ்டானங்களை நிம்மதியாகவும், அமைதியாகவும் முன்னெடுக்க வேண்டும். அதற்கான சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம்கள் கடந்த தேர்தல்களில் தமது வாக்குகளைப் பயன்படுத்தினர். அதற்கமைய ஆட்சியில் அமர்த்தப்பட்ட நல்லாட்சி அரசு குறுகிய காலம் அதனை சரிவர நிறைவேற்றியது. எனினும், மீண்டும் இனவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது முஸ்லிம்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. எனவே, இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தி இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
See More
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சராக பதவிகளை பொறுப்பேற்ற மகிந்த!
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு பதவிகளை இன்றைய தினம் அமைச்சர் மஹிந்த சமரசிங் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், துறைமுக வர்த்தக தொழிற் சங்கங்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். துறைமுக வர்த்தக தொழிற்சங்கங்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்ததை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். எவ்வாறாயினும்,தொழிற்சங்கங்களுடனும், அமைச்சுடன் தொடர்புடைய அதிகாரிகளுடனும் ஒன்றிணைந்து செயற்பட தான் தயாராக இருப்பதாகவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
See More
அவுஸ்திரேலியா புறப்பட்டு சென்ற மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பகல் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவுஸ்திரேலிய பிரதமரின் அழைப்புக்கு இணங்க இந்த பயணம் இடம்பெறுகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 25 ஆம் திகதி அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேன்புல்லை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
See More