உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

திருச்சபை செய்திகள்

மான்செஸ்டர் தாக்குதலுக்கு இந்தியத் திருஅவை கண்டனம்
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இடம்பெற்ற தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்கள் குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவிக்கும் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர், இந்திய தலத்திருஅவை மற்றும் அரசு அதிகாரிகள். இத்தாக்குதல் குறித்து வருத்தத்தை வெளியிட்ட, மும்பை பேராயரும், ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவருமான கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், இளையோர், குழந்தைகள் என எண்ணற்றோரின் உயிர்களைப் பலிவாங்கியுள்ள இந்த தாக்குதல் குறித்து ஆசியத் திருஅவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்காகச் செபிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், குறைந்தது 22 பேரின் உயிரிழப்புக்கும், ஏறத்தாழ 59 பேர் படுகாயமடைதலுக்கும் காரணமான இந்த தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்டுள்ள, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்த தாக்குதல் குறித்து, தன் வன்மையான கண்டனத்தை வெளியிடுவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தோருடன் ஒருமைப்பாட்டை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இடம்பெற்ற இத்தாக்குதல் குறித்து சீன அரசுத்தலைவர் Xi Jinping, இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி உட்பட எண்ணற்ற உலகத் தலைவர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். ஆதாரம் : Asia News/ வத்திக்கான் வானொலி
See More
புலம்பெயர்தல் கட்டாயமாக இடம்பெற வேண்டிய அவசியமில்லை
மக்கள் புலம்பெயர்தல், கட்டாயமாக இடம்பெற வேண்டிய நிலையாக இல்லாமல், ஒரு தெரிவுநிலையாக அமைய வேண்டும் என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் உரையாற்றினார். நீடித்த நிலையான வளர்ச்சி மற்றும், ஏழ்மை ஒழிப்பு குறித்த ஐ.நா. அமர்வில், புலம்பெயரும் மக்கள் பற்றிய விவாதத்தில் பகிர்ந்துகொண்ட, ஐ.நா.வுக்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார். மக்கள் புலம்பெயர்தலுக்கு உரிமையைக் கொண்டுள்ளனர் என்று சொல்வதற்குமுன், அவர்கள், தங்கள் சொந்த நாடுகளிலேயே தங்கி, அமைதியிலும், பொருளாதாரப் பாதுகாப்பிலும் வாழ்வதற்கு உரிமையைக் கொண்டுள்ளனர் என்பதை நாம் நினைவுகூர வேண்டும் எனவும் உரையாற்றினார், பேராயர் அவுசா. உலகளாவிய ஒப்பந்தங்கள் வழியாக, புலம்பெயர்தல் குறித்த ஒரு பாதுகாப்பான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டால், புலம்பெயர்தல் குறித்த பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும், பேராயர் அவுசா அவர்கள் ஐ.நா.வில் கூறினார். மேலும், புலம்பெயர்தல் பிரச்சனை, மனிதர்களால் உருவாக்கப்பட்ட விவகாரம் என்ற தலைப்பிலும், இத்திங்களன்று, மற்றோர் அமர்வில், ஐ.நா.வில் உரையாற்றினார் பேராயர் அவுசா. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
மனந்திறந்த உரையாடலில் ஈடுபட இத்தாலிய ஆயர்களுக்கு திருத்தந்தை
தூய ஆவியாரால் அசைக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்படவும், ஆறுதலளிக்கப்படவும், நம்மை அவரிடம் கையளிப்போம் என, இத்தாலிய ஆயர்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்திங்களன்று, தங்களின் எழுபதாவது பொதுப் பேரவையை தொடங்கிய இத்தாலிய ஆயர்களை, அன்று மாலையில் வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய, உரோம் ஆயரான, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் வழங்கும் சக்தியின்றி, மனிதர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வீணானதாக ஆகிவிடும் எனக் கூறினார். உற்றுக்கேட்டல், படைப்பாற்றல்திறன், மனந்திறந்த பகிர்வு, முரண்பட்ட கருத்துக்களைத் தாழ்ச்சியுடன் எதிர்கொள்ளல் போன்றவற்றுக்கு, இக்கூட்டம் உதவும் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒருவர் சொல்லும் கருத்து ஏற்க முடியாததாக இருக்கும்போதுகூட, உண்மையான உரையாடல் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இப்பேரவையில், ஒவ்வொருவரும் சுதந்திரமாக, தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவது முக்கியம் என்றும் தெரிவித்தார். இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவராக, பத்து ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய, கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ அவர்களுக்கு நன்றியும் தெரிவித்த திருத்தந்தை, தன்னோடு சேர்ந்து பணியாற்றுவது அவ்வளவு எளிது அல்ல என்றும் கூறினார். இவ்வியாழனன்று நிறைவடையும் இக்கூட்டத்தில், இத்தாலிய ஆயர்கள் மூன்று ஆயர்களின் பெயர்களை, திருத்தந்தைக்குச் சமர்ப்பிப்பார்கள். இம்மூவரில் ஒருவரை, இப்பேரவையின் புதிய தலைவராகத் திருத்தந்தை நியமனம் செய்வார். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
வருங்கால அமைதிக்கு, கலந்துரையாடலே வழி : திருத்தந்தை
“வருங்காலத்தை பொதுவில் திட்டமிடுவதற்கு, கலந்துரையாடல் நமக்கு உதவுகிறது; கலந்துரையாடல் வழியாக, அனைவரின் நலனில் அக்கறை கொண்ட ஓர் அமைதியை, நாம் கட்டியெழுப்புகிறோம்” என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியில், இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில், இத்திங்கள் இரவு இடம்பெற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்த அறிவற்ற வன்முறைச் செயலில், காயமடைந்தவர்களுக்கும், ஏனையோருக்கும் அவசரகால உதவிகளை ஆற்றிவருகின்றவர்களுக்கு, தனது செபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை. திருத்தந்தையின் இந்தத் தந்திச் செய்தியை, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார். இன்னும், மே 24, இப்புதன் காலை 8.30 மணிக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு ட்ரம்ப் அவர்கள், திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்திக்கிறார். திருத்தந்தையைச் சந்தித்த பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் செயலகத்தின் தலைவர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகியோரையும், ட்ரம்ப் அவர்கள் சந்தித்துப் பேசுவார். இச்சந்திப்புக்களின் இறுதியில், ட்ரம்ப் அவர்கள், வத்திக்கானின் சிஸ்டீன் சிற்றாலயம் மற்றும், தூய பேதுரு பசிலிக்கா பேராலயம் செல்வார் என, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. மேலும், இப்புபுதன் முற்பகல் 11.15 மணியளவில், திருமதி ட்ரம்ப் அவர்கள், உரோம் குழந்தை இயேசு சிறார் மருத்துவமனையைப் பார்வையிடுவார் எனவும், திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
உலகப்போக்குகளை கண்டிப்போர் சித்ரவதைகளுக்கு உள்ளாவார்கள்
உலகப்போக்குகளைக் கண்டித்ததற்காக எண்ணற்ற துறவியரும் அருள்பணியாளர்களும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர், ஏனெனில் துணிச்சலற்ற, அதேவேளை, சுகம் தேடும் நிறுவனமாக திருஅவை இருக்க வேண்டும் என தீயோன் விரும்புகின்றான் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். உலகப்போக்குகளைக் கண்டிப்போர் சித்ரவதைகளுக்கு உள்ளாவார்கள் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்கு எடுத்துக்காட்டாக, சான் சால்வதோர் பேராயர் அருளாளர் ஆஸ்கர் ரொமேரோவின் வாழ்வைக் குறிப்பிட்டார். தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, வாழ்வுமுறைகளை மாற்றி, மகிழ்ச்சியுடன் நற்செய்தியை பறைசாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தவறுகளைக் கண்டவிடத்து அமைதி காப்பவர்கள் தப்பி விடுவதையும், கண்டனக் குரல் எழுப்புபவர்கள் தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதையும், மீட்பு வரலாற்றில் பார்க்கிறோம் எனவும் கூறினார் திருத்தந்தை. ஏழைகளின் சார்பாக உண்மையை ஓங்கி உரைத்ததால் அருளாளர் ரொமேரோ கொலை செய்யப்பட்டதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல நாடுகளில் இத்தகைய நிகழ்வுகள் பல்வேறு காலக்கட்டங்களில் இடம்பெற்றுள்ளன எனவும் கூறினார். ஊதியம் ஈட்டுவதில் அக்கறை காட்டும் ஒரு மதத்தைவிட்டு விலகி, மகிழ்ச்சியுடன் நற்செய்தியை போதிக்கும் மதமாக, திருஅவை உருவெடுக்கவேண்டும் என்றார் திருத்தந்தை. மறைசாட்சிகள் இல்லையென்றாலோ, துணிச்சலற்றதென்றாலோ, கடவுளின் நற்செய்தியை பறைசாற்ற பயந்தாலோ, அது, இயேசுவின் திருஅவையாக இருக்க முடியாது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர் பணிகள் நூலின் பிரிவு 16ன் நிகழ்வுகளை மையமாக வைத்து மறையுரை வழங்கினார். சான் சால்வதோரில் 1980ம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், அருளாளராக உயர்த்தப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவாக, இத்திருப்பலியை நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
அணு உலை பாதுகாப்பில் மக்களின் பொறுப்புணர்வு
அணு சக்தி குறித்த விவகாரங்களில் முடிவெடுப்பதற்கு முன்னர் மக்களின் கருத்துக்களுக்கு முழு மதிப்புக் கொடுக்கப்பட வேண்டும் என தென் கொரிய ஆயர்கள் அந்நாட்டு அரசை விண்ணப்பித்துள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறைவா உமக்கே புகழ் (Laudato Si) என்ற திருமடலை மையமாக வைத்து அண்மையில் கருத்தரங்கு ஒன்றை நடத்திய தென் கொரிய ஆயர்கள், மின்சக்தி குறித்த பிரச்சனைகளில் பொது மக்களின் ஈடுபாட்டிற்கு ஊக்கமளிப்பதுடன், சுற்றுச்சூழல் நட்புறவுடன் மின்சக்தி சேமிப்பில் அவர்களின் பங்கேற்பு வரவேற்கப்பட வேண்டும் என அறிவித்தனர். ஜப்பானில் அணுசக்தி விபத்து இடம்பெற்ற Fukushima அணு மையத்தை அண்மையில் பார்வையிட்டுத் திரும்பிய தென் கொரிய ஆயர் பேரவை தலைவர் ஆயர் Peter Kang U-il உரைக்கையில், அணு ஆலை விபத்து என்பது, வெறும் தொழில்நுட்ப தவறு மட்டும் அல்ல, மாறாக அது மக்களின் வாழ்வையே அசைத்துப் பார்க்கக் கூடியது என்றார். திருத்தந்தையின் இறைவா உமக்கே புகழ் திருமடலில் கூறப்பட்டுள்ளதுபோல், அணு உலை பாதுகாப்பு குறித்த உண்மைகள், வெளிப்படையாக இருக்க வேண்டிய அதேவேளை, அவற்றைக் கண்காணிப்பதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர், தென் கொரிய ஆயர்கள். ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி
See More
ஐந்து புதிய கர்தினால்கள் நியமனம்
மாலி, இஸ்பெயின், சுவீடன், லாவோஸ், எல் சால்வதோர் ஆகிய நாடுகளுக்கு, ஐந்து புதிய கர்தினால்களை, இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின் அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். ஆசியா, மற்றும், ஆப்ரிக்கா கண்டங்களிலிருந்து முறையே ஒருவர், மத்திய அமெரிக்காவிலிருந்து ஒருவர், ஐரோப்பாவிலிருந்து இருவர் என, திருத்தந்தை அறிவித்துள்ள புதிய கர்தினால்களின் பதவியேற்பு நிகழ்வு, வருகிற ஜூன் 28, சனிக்கிழமையன்று நடைபெறும் என, திருத்தந்தை கூறினார். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இப்புதிய கர்தினால்கள், இப்பூமியெங்கும் பரவியிருக்கின்ற திருஅவையின் கத்தோலிக்கத்தன்மையை வெளிப்படுத்துகின்றனர் என்றும், வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளிடம் திருத்தந்தை கூறினார். ஜூன் 28ம் தேதியன்று கர்தினால்களாக உயர்த்தப்படும் இந்த ஐவருடன், திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 227 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய எண்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆகவும் இருக்கும். இந்த 121 பேரில், 49 பேர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமனம் பெற்றவர்கள். மேலும், 106 கர்தினால்கள், எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். ஆப்ரிக்காவின் மாலி நாட்டின் Bamako பேராயர் Jean Zerbo (73); இஸ்பெயினின் பார்செலோனா பேராயர் Juan Jose Omella (71); சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோம் ஆயர் Anders Arborelius (67); லாவோஸ் நாட்டின் Pakse அப்போஸ்தலிக்க பிரதிநிதி ஆயர் Louis-Marie Ling Mangkhanekhoun (73), எல் சால்வதோர் நாட்டின் சான் சால்வதோர் துணை ஆயர் Gregorio Rosa Chavez (74) ஆகியோர், புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 29, தூயவர்கள் பேதுரு பவுல் பெருவிழாவன்று இவர்கள் எல்லாரும், திருத்தந்தையோடு இணைந்து திருப்பலி நிறைவேற்றுவார்கள். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
தூய ஆவியாரை இதயத்தில் பாதுகாத்துக்கொள்ள திருத்தந்தை அழைப்பு
தூய ஆவியார், இனிமையும், மதிப்பும் நிறைந்த ஒரு சிறப்பு மொழியை நம்மிடம் பேசுகிறார், இவரின் இந்த மொழி, கிறிஸ்தவர்கள் என்பதை நம் எண்ணத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு திருப்பலியில், மறையுரை வழங்கினார். உரோம் நகரிலுள்ள புனித பீட்டர் தமியான் (San Pier Damiani ai Monti di San Paolo) பங்கிற்கு, இஞ்ஞாயிறு மாலையில் சென்று, புதுநன்மைக்குத் தயார் செய்யும் 80 சிறார், ஏறக்குறைய நூறு இளையோர் உட்பட பல்வேறு குழுவினரைச் சந்தித்து திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, நாம் பெற்றுள்ள தூய ஆவியாரைக் காத்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மறையுரையாற்றினார். கோபமும், கசப்புணர்வும் தீயவனின் தூண்டுதலால் வருபவை, இவை, பொறாமையினால் வெளிப்படுபவை, பிளவுகளை உருவாக்கும் இந்தப் போக்கு, நம் கிறிஸ்தவ சமூகங்களில் பரவலாகக் காணப்படுகின்றது என்றும், திருத்தந்தை தெரிவித்தார். இந்தவிதப் போக்கு, உண்மையிலேயே என் இதயத்தைக் காயப்படுத்துகின்றது, நாம் ஒருவர் ஒருவர் மீது கற்களை எறிவதுபோல் இது உள்ளது, தீயவன் இதனால் ஆனந்தமடைகின்றான், இது தூய ஆவியாரைக் கேலிக்கு உட்படுத்துவதாகும் என்றும், திருத்தந்தை, மறையுரையில் கூறினார். கடவுளின் தூய ஆவியாருக்குத் துயரம் வருவிக்காமல் இருக்கவும், நம்மிலுள்ள ஆவியானவரைக் காத்துக்கொள்ளவும் அருள்வேண்டி மன்றாடுவோம் என்றும், இனிமையாகப் பேசும் மற்றும், பிறரை மதிக்கும் பண்பை வளர்த்துக்கொள்வோம் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். தூய ஆவியார் நம்மிடம் நடந்துகொள்வது போன்று, பிறரை எப்போதும் கனிவுடனும் மதிப்புடனும் நடத்துமாறும், புறங்கூறுதலை விலக்கி நடக்குமாறும் புனித தமியான் பங்கு மக்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். புனித பீட்டர் தமியான் இறந்ததன் 900மாம் ஆண்டையொட்டி, அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் 1972ம் ஆண்டிலும், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால், 1988ம் ஆண்டிலும் இந்தப் பங்கிற்குச் சென்றுள்ளனர். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
பொதுப் பேரவை நடைபெறும் நாள்கள் இயேசு பேசுவதைக் கேட்கும் காலம்
துறவு சபையில் பொதுப் பேரவை நடைபெறும் நாள்கள், காலத்தின் அடையாளங்கள் வழியாக, ஆண்டவர் பேசுவதை உற்றுக் கேட்கும் காலமாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று கூறினார். விண்ணகப் போதகரின் பக்தியுள்ள சீடர்கள் சகோதரிகள் சபையின் பொதுப்பேரவையில் கலந்துகொள்ளும் 53 பிரதிநிதிகளை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பொதுப் பேரவை, அச்சபையினரின் வாழ்வில், ஏராளமான நற்செய்தியின் கனிகளைக் கொணர வேண்டும் என்ற தன் வாழ்த்தைத் தெரிவித்தார். நற்செய்தியின் கனிகள் பற்றி விளக்கிய திருத்தந்தை, முதலில் ஒன்றிப்பின் கனிகள் அவசியம் என்றும், இந்த ஒன்றிப்பு, தூய ஆவியாருக்குத் திறந்த மனதுடன் செயல்படுவது, பவுலின் துறவுக் குழுமத்துடன் ஒன்றித்த வாழ்வு, ஏனையத் தனிவரங்களுடன் ஒன்றிப்பு, இக்கால மனிதருடன் ஒன்றிப்பு ஆகியவற்றில் வெளிப்பட வேண்டும் என்றும் கூறினார். காலத்தின் அடையாளங்கள் வழியாகப் பேசும் ஆண்டவருக்குச் செவிமடுத்தல், சபைச் சகோதரிகள், காலத்தின் மனிதர்கள் ஆகியோர் பேசுவதை உற்றுக்கேட்டல், தூய ஆவியாருக்கு விருப்பமானதைத் தேர்ந்து தெளிதல் போன்ற பொதுப்பேரவையின் பண்புகளையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். விண்ணகப் போதகரின் பக்தியுள்ள சீடர்கள் சகோதரிகள் வத்திக்கானில் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றியும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சபையினர் ஆற்றிவரும் பணிகளையும் ஊக்குவித்தார். கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஆரம்பித்த இச்சபையின் பொதுப் பேரவை, இம்மாதம் 28ம் தேதி நிறைவடையும். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
தூய ஆவியாருக்கு இதயத்தைத் திறங்கள் : திருத்தந்தை
இயேசுவே ஆண்டவர் என்று சொல்வதற்கு நமக்குக் கற்றுத்தர வல்லவர் தூய ஆவியார் மட்டுமே என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலை நிறைவேற்றியத் திருப்பலியில், மறையுரை வழங்கினார். “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம், நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன், தூய ஆவியாராம் துணையாளரை உங்களுக்கு அனுப்புவேன், அவர், தந்தையிடம் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்…” என, இயேசு இறுதி இரவு உணவின்போது தம் சீடர்களுக்கு ஆற்றிய நீண்ட உரையை மையப்படுத்தி, இத்திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். தூய ஆவியாருக்குச் செவிமடுக்கும் வண்ணம், நாம் நம் இதயங்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும், இதன் வழியாக நாம் கிறிஸ்துவுக்குச் சான்று பகர முடியும் என, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இயேசுவால் நாம் மீட்கப்படுவோம் என்பதற்கு உறுதி வழங்கும் தூய ஆவியாராம் துணையாளர் பற்றி, தனது மறையுரையில் சிறப்பாக கவனம் செலுத்திய திருத்தந்தை, இயேசுவின் கொடையாகிய தூய ஆவியார், திருஅவையின் தோழராகப் பயணம் செய்கிறார் என்றும் கூறினார். தூய ஆவியார் இன்றி, இயேசுவே ஆண்டவர் என, நம்மில் யாருமே சொல்ல முடியாது, அதை ஏற்று வாழ முடியாது என்றும், தூய ஆவியாருக்கு நாம் இதயங்களைத் திறக்காவிடில், அவரால் அங்கு நுழைய முடியாது என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை. நம் இதயங்கள் உண்மையிலேயே, தூய ஆவியாருக்குத் திறக்கப்பட்டுள்ளனவா எனவும், தூய ஆவியாரின் ஏக்கங்களையும், அவர் நம் இதயங்களில் சொல்வதையும் கேட்பதற்கு நாம் முயற்சிக்கின்றோமா எனவும், நம்மையே நாமே கேட்டுக்கொள்வோம் என, திருப்பலியில் கலந்துகொண்ட விசுவாசிகளிடம் கூறியத் திருத்தந்தை, தூய ஆவியாருக்கு நம் இதயங்களைத் திறப்பதற்கு ஆண்டவரிடம் அருளை மன்றாடுவோம் எனவும் கூறினார். மேலும், “பிறர் இல்லாமலும், பிறருக்கு மேம்பட்டவர்களாக, அல்லது பிறருக்கு எதிரானவராக வாழாமல், பிறரோடும், பிறருக்காகவும் வாழ்வதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், இத்திங்களன்று வெளியாயின. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More