உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

திருச்சபை செய்திகள்

உலகின் அமைதிக்கு கிறிஸ்தவர்க்கும், முஸ்லிம்களுக்கும் அழைப்பு
இவ்வாண்டு கிறிஸ்து பிறப்பு விழாவும், மிலாடி நபி பண்டிகையும் அடுத்தடுத்து சிறப்பிக்கப்பட்டது, உலகில் அமைதியைக் கொண்டு வருவதற்கு கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அழைப்பு விடுப்பதாய் அமைந்துள்ளது என்று நைஜர் நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர். இறைவாக்கினர் முகமது அவர்களின் பிறப்பு விழாவான மிலாடி நபி பண்டிகை, இவ்வாண்டில், டிசம்பர் 24, கடந்த வியாழனன்று சிறப்பிக்கப்பட்டது குறித்து, தங்களின் கிறிஸ்மஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ள நைஜர் தலைநகர் Niamey பேராயர் Laurent Lompo, Maradi ஆயர் Ambroise Ouedraogo ஆகிய இருவரும் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அனைத்து விசுவாசிகளுக்கும் மூதாதையரான தந்தை ஆபிரகாமில் கொண்டிருக்கும் பொதுவான விசுவாசத்தின் பெயரில், உலகில் அமைதியைக் கொண்டு வருவதற்கு, இவ்விரு மதத்தவருக்கும் இவ்விழாக்கள் அழைப்பு விடுக்கின்றன என்று, இவ்விரு ஆயர்களும் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தி கூறுகிறது. அன்பு, மன்னிப்பு, ஒருவர் ஒருவரை மதித்தல், அமைதி, தேசிய ஒற்றுமை ஆகியவற்றில் வளர, கிறிஸ்தவர்க்கும், முஸ்லிம்களுக்கும் நைஜர் நாட்டின் விருதுவாக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஆயர்களின் கிறிஸ்மஸ் செய்தி கூறுகிறது 457 ஆண்டுகளுக்குப் பின்னர், கிறிஸ்து பிறப்பு விழாவும், மிலாடிநபி பண்டிகையும் இந்த 2015ம் ஆண்டில் அடுத்தடுத்து சிறப்பிக்கப்பட்டன. ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி
See More
இந்திய அரசுப் பள்ளிகளில் அனைத்து மதங்கள் படிப்புக்கு அழைப்பு
இந்தியாவில் கல்விப் பாடத்திட்டங்களில் இந்து மத மறைநூல் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கு அரசு முயற்சித்துவரும்வேளை, நாட்டின் அரசுப் பள்ளிகளில் அனைத்து மதங்கள் பற்றியும் படிப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுமாறு இந்திய கத்தோலிக்கத் திருஅவை அழைப்பு விடுத்துள்ளது. விவிலியம், குரான் மற்றும் பிற மதங்களின் திருநூல்களிலிருந்து கற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார் போபால் பேராயர் லியோ கொர்னேலியோ. மேலும், கல்விப் பாடத்திட்டங்களில் அனைத்து மதங்களின் மறைநூல்களை இணைப்பது நன்மை பயக்கும் என்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பேச்சாளர் அருள்பணி Gyanprakash Topno அவர்கள் கூறினார். மாணவர்கள் ஒரு மதத்தின் புத்தகத்தோடு ஒட்டிக்கொள்வதைவிட அனைத்து மதங்களின் மறைநூல்கள் பற்றி கற்றுக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார் அருள்பணி Gyanprakash. ஹரியானாவில் அடுத்த கல்வியாண்டில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பகவத் கீதை கற்றுக்கொடுக்கப்படும் என்று பிஜேபி அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி
See More
பிலிப்பைன்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தை அனுதாபம்
தென் பிலிப்பைன்சின் மின்டனாவோ தீவில் இடம்பெற்ற சமய வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்மஸ் திருவிழிப்பு நாளன்று இடம்பெற்ற தாக்குதல்களில் முஸ்லிம் புரட்சிக் குழு ஒன்று, ஒன்பது கிறிஸ்தவக் குடிமக்களைக் கொலை செய்ததையடுத்து சமய வன்முறை வெடித்துள்ளது. இவ்வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனது செபங்களைத் தெரிவித்துள்ளதுடன், உரையாடல், சகிப்புத்தன்மை மற்றும் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், நைஜீரியாவில், எரிவாயு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலியான மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனது செபங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்திகளை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில் இஞ்ஞாயிறன்று அந்நாடுகளுக்கு அனுப்பியுள்ளார். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
Taizé குழும இளையோர்க்கு திருத்தந்தை வாழ்த்து
இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், கிறிஸ்தவர்கள், உடல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த இரக்கப் பணிகளில் ஈடுபடுமாறு பல நாடுகளின் இளையோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இஸ்பெயினின் வலென்சியா நகரில் டேஜே குழுமத்தின் 38வது ஐரோப்பிய கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஆயிரக்கணக்கான இளையோர்க்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இரக்கம் என்ற தலைப்பு, இளையோர் அனைவரையும் ஒன்றுசேர்த்து, 2016ம் ஆண்டு முழுவதும் தன்னோடு மிக நெருக்கமாக வைத்திருக்கும் என்றும், இரக்கம் என்ற பண்பு வாழ்வின் சமூகத் தளங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் இஞ்ஞாயிறன்று அனுப்பியுள்ளார். திருஅவை, மனித சமுதாயத்திற்காக இருக்கின்றது, கிறிஸ்தவர்கள் இருக்குமிடத்தில் எந்தவொரு மனிதரும் இரக்கத்தின் பாலைவனச்சோலையைக் கண்டுகொள்ள வேண்டும், உங்களின் கிறிஸ்தவச் சமூகங்கள் இவ்வாறுதான் மாற வேண்டுமெனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
திருக்குடும்பம், நற்செய்தியின் ஓர் உண்மையான கல்விக்கூடம்
இயேசு, மரியா, யோசேப்பு ஆகிய மூவரைக் கொண்ட திருக்குடும்பம், ஒவ்வொரு விசுவாசிக்கும், குறிப்பாக, குடும்பங்களுக்கு நற்செய்தியின் ஓர் உண்மையான கல்விக்கூடம் என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருக்குடும்ப விழாவான இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு குடும்பமும், திருக்குடும்பத்தின் எடுத்துக்காட்டான மற்றும் சான்று வாழ்விலிருந்து, மதிப்புமிக்க வழிகாட்டுதலைப் பெற முடியும் என்று கூறினார். குடும்பத்தை, வாழ்வு மற்றும் அன்பின் சிறப்புக் குழுவாக அமைப்பதற்கு இறைவன் வகுத்துள்ள திட்டம் நிறைவேறுவதை திருக்குடும்பத்தில் நாம் கண்டு வியக்கிறோம், இவ்வாறு ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும், இல்லத் திருஅவையாக வாழ்வதற்கு, திருக்குடும்பத்திலிருந்து கற்றுக்கொள்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்தவக் குடும்பங்கள், பல்வேறு சூழல்களில் புரிந்துகொள்ளாமை மற்றும் இன்னல்களை எதிர்கொள்ளும் இக்காலத்தில், குடும்பத்தின் மதிப்பு பற்றிய சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, குழந்தை, இறைவனின் கொடையாக வரவேற்பதற்கு, நம் அன்னை மரியாவும் யோசேப்பும் நமக்குக் கற்றுத் தருகின்றனர் என்றும் கூறினார். ஒன்றிணைந்த குடும்பங்களில், சிறார் தங்களின் வாழ்வை, முழு பக்குவமடைந்த நிலைக்கும், அர்த்தமுடன் வாழ்வதற்கும், அன்பைச் சுதந்திரமாகக் கொடுப்பதற்கும் பெறுவதற்கும், கனிவு, ஒருவர் ஒருவரை மதித்தல், புரிந்துகொள்ளல், மன்னிப்பு, மகிழ்வு ஆகியவற்றில் வளர்வதற்கும் கற்றுக் கொள்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இம்மூவேளை செப உரைக்கு முன்னர் குடும்பங்களை வாழ்த்திப் பாடிய சிறார் குழுவுக்குத் தனது நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
கடவுளே பொறுமை, பொறுமையே கடவுள்!
இறையன்பும், பிறரன்பும் நிறைந்த அந்தோனி அவர்களின் இல்லம் தேடி, முதியவர் ஒருவர் தர்மம் கேட்டு வந்தார். அந்தோனி அவர் மீது இரக்கம் கொண்டு, அவரைத் தன்னுடன் உணவருந்த அழைத்தார். முதியவருக்கு, இந்த அழைப்பு, ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. உணவருந்துவதற்கு முன், வீட்டுத்தலைவர் அந்தோனி, கண்களை மூடி, இறைவனுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தார். அந்தோனி, கடவுளின் பெயரைச் சொன்னதும், முதியவர், கோபம் கொண்டு, இறைவனை வசைபாட ஆரம்பித்தார். இதைக் கண்ட அந்தோனி, கோபத்துடன், அந்த முதியவரை அங்கிருந்து விரட்டிவிட்டார். அன்றிரவு, இறைவன் அந்தோனியின் கனவில் தோன்றி, "அந்த முதியவர் கடந்த 30 ஆண்டுகளாக, என்னை, தினமும் திட்டிக்கொண்டிருக்கிறார். நான் அவருக்கு ஒவ்வொரு நாளும் உணவு கிடைக்கும்படி வழி செய்துவருகிறேன். அவர் திட்டியதை உம்மால் ஒருநாள் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே!" என்று வருத்தத்துடன் சொல்லிவிட்டு மறைந்தார். கடவுளே பொறுமை, பொறுமையே கடவுள்!
See More
முஸ்லிம் சிறுமி உருவாக்கிய கிறிஸ்மஸ் குடில்
சனவரி முதல் நாள் மாலை 5 மணிக்கு உரோம் தூய மேரி மேஜர் பசிலிக்காவில் புனிதக் கதவைத் திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ். இறைவனின் அன்னையாம் புனித கன்னி மரியாவின் விழா நாளும், 49வது உலக அமைதி நாளுமான சனவரி முதல் தேதியன்று தூய மேரி மேஜர் பசிலிக்காவில் புனிதக் கதவைத் திறந்து வைப்பார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், ஈசா என்ற ஒரு முஸ்லிம் சிறுமி உருவாக்கிய கிறிஸ்மஸ் குடிலை, கடந்த புதன் பொது மறைக்கல்வி உரையின் இறுதியில் ஆசிர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். சிற்பி Gilberto Perlotto அவர்களின் உதவியுடன், குறைந்தது 103 நாடுகளைச் சேர்ந்த 208 மரத்துண்டுகளால், இக்குடிலை உருவாக்கியிருக்கிறார் சிறுமி ஈசா. இம்மரத்துண்டுகள், போர் மற்றும் குற்ற வன்முறைகள் இடம்பெறும் இடங்கள், இயற்கை அல்லது மனிதர் காரணமாக இடம்பெற்ற பேரிடர்ப் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவை. வட இத்தாலியின் வெனெத்தோ மாநிலத்தில் Pedavenaவில் துன்புறும் சிறார்க்கென அமைக்கப்பட்டுள்ள வில்லா சான் பிரான்சிஸ்கோ இல்லத்தில் வாழ்கின்ற சிறுமி ஈசா இக்குடிலை அமைத்துள்ளார். இந்தக் குடில் அமைக்கப்பட்ட முறை குறித்து கேள்விப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்குடிலின் முன்பாக சிறிது நேரம் அமைதியாகச் செபித்து ஆசிர்வதித்தார். மேலும், இக்குடில் திருத்தந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் வத்திக்கான் அதிகாரிகள் கூறினர்.
See More
கிறிஸ்தவர்களோடு சேர்ந்து அறிவிக்கும் முஸ்லிம்-கடவுள் மிகவும் இரக்கமுள்ளவர்
இரக்கம் கடவுளுக்குரிய பண்பு, நாம் ஒருவர் ஒருவரிடம் இரக்கமுள்ளவர்களாக வாழ வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார், முஸ்லிமாகிய நான், எனது கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளோடு சேர்ந்து கடவுள் மிகவும் இரக்கமுள்ளவர் என்பதை ஏற்கிறேன் என்று இந்திய முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் கூறினார். இம்மாதம் 8ம் தேதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இரக்கத்தின் யூபிலி ஆண்டு குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த, இந்திய அரசின் சிறுபான்மை மொழிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் Akhtarul Wasey அவர்கள் இவ்வாறு கூறினார். "மிகவும் தாராளமிக்க, மிகவும் இரக்கமுள்ள கடவுள் பெயரால் (Bismi llahi-ar-Rahmani ar-Rahimi)" என்று தொடங்கும் இஸ்லாமியச் செபத்தை, குறிப்பிட்டுப் பேசிய பேராசிரியர் வாசி அவர்கள், முஸ்லிம்கள், தங்களோடு வாழும் மனிதர்களிடம் இரக்கமுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டுமென்பதை இச்செபம் நினைவுபடுத்துகின்றது என்று கூறினார். ஏழைகள், ஓரங்கட்டப்பட்டவர் மற்றும் கைவிடப்பட்டவர்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை ஆற்றும் பணிகளுக்கு நன்றி தெரிவித்த பேராசிரியர் வாசி அவர்கள், நமக்கு அடுத்திருப்பவரின் வாழும் நிலைகளை மேம்படுத்த, நன்மனம் கொண்ட மனிதர்கள், கத்தோலிக்கத் திருஅவையுடன் இணைந்து செயலாற்றுவர் என்றும் கூறினார். இரக்கம், திருஅவை வாழ்வின் அடித்தளம் என்றும், அனைத்து திருத்தூதுப் பணிகளும் இரக்கத்தை வெளிப்படுத்துவதாய் அமைய வேண்டுமென்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் திருமுகம் (Misericordiae vultus) என்ற அறிவுரைத் தொகுப்பில் எழுதியுள்ளதை நான் அறிந்துள்ளேன் என்றும் கூறினார் பேராசிரியர் வாசி.
See More
புலம்பெயர்ந்தோருடன் கிறிஸ்மஸைச் சிறப்பித்த திருப்பீடச் செயலர்
உரோம் நகரில் வாழும் புலம்பெயர்ந்த ஏழை மக்களுடன் இணைந்து சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பில், கிறிஸ்மஸ் மதிய விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியத்ரோ பரோலின். புலம்பெயர்ந்த மக்களுடன் உணவருந்திய திருப்பீடச் செயலர், பின்னர், அங்கு புகலிடம் தேடியுள்ள ஏறத்தாழ 600 ஏழைகளையும் சந்தித்து, தன் ஆறுதலையும் வழங்கினார். அவர்களுக்கு உரை ஒன்றும் நிகழ்த்திய கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தையின் அருகாமையை தான் அம்மக்களுக்குக் கொணர்ந்துள்ளதாகவும், புலம்பெயர்ந்துள்ள அம்மக்களின் சொந்த நாடுகளுக்காக செபிப்பதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து வாழமுடியும் என்பதற்கு இந்த விருந்து ஓர் எடுத்துக்காட்டாக இருந்ததாகவும் கூறினார். ஒரே கடவுளின் குழந்தைகளாக இருக்கும் நாம், நமக்குள் உடன்பிறந்த உணர்வுடன் வாழ்வோம் என்ற அழைப்பையும் முன்வைத்த திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், உடன்பிறந்த உணர்வு நம் வாழ்வில் தொடரட்டும் என்றார். பிறரன்புப் பணிகளிலும், அமைதிப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள கத்தோலிக்க உதவி நிறுவனமான சான் எஜிதியோ அமைப்பு, இத்தாலியின் பல்வேறு நகர்களில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு தினசரி உணவு, தங்குமிடம் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்து வருகிறது. உலகின் 650 நகர்களில், 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உதவி வருகிறது, எஜிதியோ கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.
See More
திருத்தந்தை ஆற்றும் திருக்குடும்பத் திருவிழா திருப்பலி
இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, டிசம்பர் 27, ஞாயிறன்று கொண்டாடப்படும் திருக்குடும்பத் திருவிழாவன்று காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களுக்கென சிறப்புத் திருப்பலியை, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவேற்றுகிறார். நடைபெறும் யூபிலி ஆண்டையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள பல முக்கிய நிகழ்வுகளில், குடும்பங்களின் யூபிலி தனி சிறப்பு பெற்றது என்று, திருப்பீட குடும்பங்கள் அவையின் தலைவர், பேராயர், வின்சென்சோ பாலியா அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார். திருக்குடும்பத் திருவிழாவன்று, உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கக் குடும்பங்கள், தாங்கள் வாழும் இடங்களுக்கு அருகேயுள்ள புனிதக் கதவுகளைக் கடந்து சென்று, திருப்பலியில் பங்கேற்குமாறு திருத்தந்தை சிறப்பாக அழைப்பு விடுத்துள்ளார் என்பதையும் பேராயர் பாலியா அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார். குடும்பங்கள் என்று குறிப்பிடும்போது, அவரவர், தங்கள் நெருங்கிய குடும்பங்களையும், உறவுகளையும் மட்டும் எண்ணிப் பார்க்காமல், அந்த வட்டத்தைக் கடந்து, சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோரையும் தங்கள் குடும்பம் என்று ஏற்றுக்கொள்ள இரக்கத்தின் சிறப்பு யூபிலி அழைப்பு விடுக்கிறது என்று, பேராயர் பாலியா அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார். துவங்கியுள்ள இந்த யூபிலி ஆண்டில், குடும்பத்தினர், துறவியர், இளையோர், நோயுற்றோர், குழந்தைகள் என்று பல குழுவினருக்கும், சிறப்பான நிகழ்வுகளும், வழிபாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
See More