உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

திருச்சபை செய்திகள்

கிறிஸ்மஸ் விழாவை எளிமையாகக் கொண்டாடுங்கள், மதுரை பேராயர்
தமிழகத்தில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில், கிறிஸ்மஸ் பெருவிழாவை எளிமையாகக் கொண்டாடுமாறு மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இத்திங்களன்று அறிக்கை வெளியிட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள், கிறிஸ்மஸ் என்பது, கொடுப்பதும், அக்கறை காட்டுவதுமாகும், எனவே, இவ்வாண்டு கிறிஸ்மஸ், கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களுடன் இணைந்து கொண்டாடுவதாய் அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொடுப்பது மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை அமைத்துக் கொடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டால் மட்டுமே கிறிஸ்மஸ் கொண்டாட்டம் பொருள் உள்ளதாக இருக்கும் என்றும் மதுரை பேராயரின் அறிக்கை கூறுகிறது. தமிழக கத்தோலிக்கத் திருஅவை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிலைகளில் உதவி வருகின்றது என்றும் பேராயர் அந்தோணி அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னை, கடலுார், திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியில் ஏராளமான மக்கள், வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யும் வகையில், மதுரை உயர்மறைமாவட்டத்தில் உள்ள 69 பங்குகளைச் சேர்ந்த மக்களுக்கு தெரிவித்தோம். இதை ஏற்று ஏராளமானோர் பணம், பொருளுதவி அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வுதவிகளை நேரடியாக வழங்கி வருகிறோம். பிரச்சனைகளைக் களைந்து தீர்வு காண்பதில் அக்கறை காட்டி வருகிறோம். கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் கிறிஸ்மஸ் பெருவிழாவை எளிமையாகக் கொண்டாட அறிவுறுத்தியுள்ளோம் என்றும் பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் கூறியுள்ளார். ஆதாரம் : The Hindu/வத்திக்கான் வானொலி
See More
சிரியா, நிக்கராகுவா, கோஸ்டா ரிக்காவில் அமைதிக்கு அழைப்பு
சிரியா, லிபியா, நிக்கராகுவா, கோஸ்டா ரிக்கா ஆகிய நாடுகளில் அமைதி நிலவவும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டை தான் பாராட்டுவதாகத் தெரிவித்த திருத்தந்தை, நம்பிக்கை நிறைந்த விருப்பத்துடனும், மனத்தாராள உணர்வுடனும் இந்த அமைதிப் பாதையில் தொடர்ந்து செயல்படுமாறு விண்ணப்பித்தார். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள சிரியா குறித்த அமைதித் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு, அனைத்துலக சமுதாயம் தெளிவான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், லிபியாவில் தேசிய ஒன்றிப்பு அரசு, அண்மையில் கொண்டுவந்துள்ள திட்டம் அந்நாட்டின் எதிர்காலத்தில் நம்பிக்கையைக் கொண்டுவந்துள்ளது, இத்திட்டம் வெற்றியடையுமாறும் செபிக்கக் கேட்ட திருத்தந்தை, நிக்கராகுவா மற்றும் கோஸ்டா ரிக்கா நாடுகளுக்கிடையே சிதைந்திருந்த உறவுகள் சீர்செய்யப்படுமாறும் கூறினார். இவ்விரு நாடுகளுக்கிடையே இடம்பெற்ற எல்லைப் பிரச்சனைக்குக் கடந்த வாரத்தில் பன்னாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது பற்றிக் குறிப்பிட்டு, உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு வழியாக இவ்விரு நாடுகளும் உடன்பிறந்த உணர்வை வளர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
See More
அன்னை தெரேசா அறிவிப்பு, இரக்கத்திற்கு விடுக்கப்படும் அழைப்பு
அருளாளர் அன்னை தெரேசா அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளது, நாம் இதுவரை பெற்றுள்ள கிறிஸ்மஸ் கொடைகளில் மிகச் சிறந்தது என்று கூறினார் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ். இது குறித்து கருத்து தெரிவித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அன்னை தெரேசா அவர்களுடன் தனிப்பட்ட முறையில் மிக ஆழ்ந்த நட்புறவு கொண்டிருந்ததாகவும், பல நிகழ்வுகளில் பல மணி நேரங்கள் அவர்களுடன் செலவிட்டதாகவும் கூறினார். உலகுக்கும், சமயச் சார்பற்ற உலகுக்கும், கிறிஸ்தவ உலகுக்கும் அன்னை தெரேசா அவர்கள் இந்தியாவின் கொடை என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மத வேறுபாடின்றி, எல்லாரும் அன்னை தெரேசாவை அன்பு கூர்கின்றனர் என்றும் தெரிவித்தார். அன்னை தெரேசா அவர்கள், கருணை வாழ்வை உண்மையிலேயே வாழ்ந்தவர்கள், அவரின் ஒவ்வொரு நாள் வாழ்வும் இரக்கத்தின் ஆண்டாக இருந்தது, அவர் புனிதராக உயர்த்தப்படுவது 21ம் நூற்றாண்டில் இரக்கத்திற்குத் தெளிவாக அழைப்பு விடுப்பதாக உள்ளது என்று கூறினார் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ். 2008ம் ஆண்டில் எந்த மருத்துவ சிகிச்சைகளும் பலன்தராமல் கோமா நிலையில் இறந்து கொண்டிருந்த பிரேசில் நாட்டு பொறியியலாளர் ஒருவரின் மனைவி, அருளாளர் அன்னை தெரேசாவிடம் தொடர்ந்து செபித்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார். 42 வயது நிரம்பிய அந்தப் பொறியியலாளர் தற்போது முழுமையாய்க் குணமடைந்து தொழில்நுட்ப பொறியாளராகப் பணியாற்றி வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரம் : AsiaNews
See More