உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

திருச்சபை செய்திகள்

திருத்தந்தையின் மொழிபெயர்பாளருக்கு புதிய பொறுப்பு
வத்திக்கானின் பொது நிலையினர், குடும்பம் மற்றும் வாழ்க்கை பணிக்குழுவின் செயலர் பொறுப்பு எட்டு மாதம் காலியாக இருந்த பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் 46 வயதான பிரேசிலிய அருள்தந்தை ஒருவரை செயலராக நிமித்திருப்பதால் இயங்க தொடங்கியுள்ளது. டேடான் பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு மரியன்னை ஆய்வு கழகத்தில், மரியன்னை இயலில் முனைவர் பட்டம் முடித்துள்ள அருள்தந்தை அலெக்ஸாண்டர் அவி மெல்லோ புதிய செயலராக புதன்கிழமை வத்திக்கானில் நியமிக்கப்பட்டார். இந்த பணிக்குழு பொது நிலையினர் மற்றும் குடும்பம் கவுன்சில்களை இணைத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி இயங்க தொடங்கியது. வாழ்க்கைக்கு முன்னுரிமை, பொது நிலையினர் திருப்பணி, கடவுளின் திட்டப்படியும், மனித வாழ்க்கை பாதுகாப்பு மற்றும் ஆதரவுக்காகவும் குடும்ப மேய்ப்பு பணி மற்றும் சேவை செய்ய திருத்தந்தை இந்த பணிக்குழுவுக்கு அதிகாரம் அளித்துள்ளார். இதனுடைய தலைவர் கர்தினால் அல்லது ஆயராக இருப்பார் என்றும் செயலர் பொது நிலையினராக இருக்கலாம் என்று இதன் விதிமுறை உள்ளது. மூன்று துணை செயலர்கள் பொது நிலையினராக இருப்பர். இந்த பொறுப்புகளில் நபர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. திருத்தந்தை பிரான்சிஸூம், அருள்தந்தை அவியும் கடந்த பத்தாண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்தவர்கள். திருத்தந்தை பிரான்சிஸூக்கு மொழிபெயர்ப்பாளராக அருள்தந்தை அவி பணிபுரிந்துள்ளார்.
See More
உக்ரேனின் ஆன்மீக தந்தை கர்தினால் ஹூசார் 84ஆம் வயதில் மரணம்
தொலைக்காட்சியிலும், வானொலியிலும் வழக்கமாக தோன்றி மறையுரையாற்றும் உக்ரேனின் கர்தினால் லுபோம்யிர் ஹூசார் 84வது வயதில் மரணமடைந்துள்ளார். உலகிலுள்ள பல உக்ரேன் மக்களை போல அகதியாக இருப்பது என்றால் என்ன, இடம்பெயர்ந்து வாழும் நிலை என்றால் என்ன என்று முழுமையாக அறிந்தவர் இந்த கர்தினால் ஹூசார். இந்த அனுபவம் தான் ஐந்து மொழிகளை அறிந்திருக்கும் திறனை அவருக்கு வழங்கியது. எல்லா மொழிகளிலும் நகைச்சுவையாக பேசும் அளவுக்கு அவர் புலமை பெற்றிருந்தார். பணம் மற்றும் அதிகார பலத்தோடு வாழ்ந்திருக்க வேண்டிய சோவியத் உக்ரேனில், மிகவும் எளிமையான வாழ்க்கையை அவர் வாழ்ந்து வந்தார். ஒட்டு வாங்குவதற்கு மட்டும் திருச்சபையை பயன்படுத்தி கொள்ளும் அரசியல்வாதிகளை இவர் எதிர்த்து வந்துள்ளார்.
See More
முதல் திருப்பலி நிறைவேற்றிய போலந்து தலைமையமைச்சரின் மகன்
கடந்த வார இறுதியில் குருப்பட்டம் பெற்ற தன்னுடைய மூத்த மகன் நிறைவேற்றிய திருப்பலியில் போலந்து தலைமையமைச்சர் பியேடா சஸிட்லோ பங்கேற்றுள்ளார். 25 வயதாகும் அருள்தந்தை டைடோட்டியுஸ், தான் திருமுழுக்கு பெற்ற தோவாலயத்தில் அருள்தந்தையாக முதல் திருப்பலியை நிறைவேற்றியுள்ளார். அவர் வளர்ந்த ஊரிலேயே இந்த அருள்தந்தை தன்னுடைய முதல் திருப்பலியை நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருப்பிலியின்போது, என்னுடைய கடவுளுக்கு நான் பட்டிருக்கும் நன்றிகடனை வெளிப்படுத்துவதற்கு மனித சொற்கள் போதாது. எனவே, உம்முடைய புனித சேவையில் என்னை எப்போதும் வைத்திருக்க தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்” என்று இந்த புதிய அருள்தந்தை தெரிவித்திருக்கிறார். தன்னுடைய மகனால். தானும், தன்னுடைய கணவரும் பெருமையடைவதாக போலந்து தலைமையமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
See More
உரோமையில் அருங்கொடை மறுமலர்ச்சி இயக்க பொன்விழா
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த 30,000த்திற்கும் அதிகமானோர், இவ்வியக்கத்தின் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட உரோம் நகரில் கூடியுள்ளனர் என்று, CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது. மே 31ம் தேதி இப்புதன் முதல், ஜூன் 4, வருகிற ஞாயிறு சிறப்பிக்கப்படும் தூய ஆவியார் வருகைப் பெருவிழா முடிய, இவ்வியக்கத்தினர், உரோம் நகரில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். ஜூன் 3, சனிக்கிழமை நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவிழிப்பு வழிபாடு, ஜூன் 4, ஞாயிறு, பெருவிழா திருப்பலி ஆகிய நிகழ்வுகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு வளாகத்தில் தலைமையேற்று நடத்துகிறார். 220 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டங்களில், எவஞ்செலிக்கல், பெந்தக்கோஸ்து சபைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 300 பேர் கலந்துகொள்கின்றனர் என்று இவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர். இந்த பொன்விழா நிகழ்வுகளில், 50 ஆயர்கள் மற்றும் 600க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள் பங்கேற்கின்றனர் என்றும், பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கெவின் பாரெல் (Kevin Farrell) அவர்கள், வெள்ளிக்கிழமை திருப்பலியை நிகழ்த்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி
See More
நற்செய்தியை நோக்கி மனம் திரும்ப அழைக்கும் திருத்தந்தை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப்பணியின் வழியே, புதியக் கொள்கைகளைச் சொல்லித்தருகிறார் என்பதைக் காட்டிலும், நற்செய்தியை நோக்கி நாம் மனம் திரும்ப அழைக்கிறார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று, இத்தாலிய கர்தினால் ஒருவர் கூறினார். பிளாரன்ஸ் உயர் மறைமாவட்டத்தின் பேராயரான, கர்தினால் ஜியூசெப்பே பெத்தோரி (Giuseppe Betori) அவர்கள், அருள்பணியாளர்கள் பேராயத்தின் நிறையமர்வுக் கூட்டத்தில், இப்புதனன்று வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார். மே 30, இச்செவ்வாய் முதல், ஜூன் 1, இவ்வியாழன் முடிய உரோம் நகரில் நடைபெறும் அருள்பணியாளர்கள் பேராயத்தின் நிறையமர்வுக் கூட்டத்தில், கர்தினால் பெத்தோரி அவர்கள், "திருத்தந்தை பிரான்சிஸ் எண்ணப்படி, ஒப்புரவு செய்யும் மேய்ப்பர்" என்ற தலைப்பில் உரை வழங்கினார். திருத்தந்தை வழங்கிவரும் தினசரி மறையுரைகள், அவர் வெளியிட்டுவரும் அறிக்கைகள், திருமடல்கள், அவர் மேற்கொள்ளும் பணிகள் அனைத்திலும், மனமாற்றமும், ஒப்புரவும், மையக்கருத்துக்களாக விளங்குகின்றன என்று கர்தினால் பெத்தோரி அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார். இரக்கத்தின் வெளி அடையாளமாக விளங்கும் ஒப்புரவு, மூவொரு இறைவனின் வெளிப்பாடாக அமையும் ஒப்புரவு என்ற தலைப்புக்களில் கர்தினால் பெத்தோரி அவர்கள் தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
விளிம்பு மக்களுக்காக வாழும் திருத்தந்தை - கானடா பிரதமர்
சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுக்காக திருத்தந்தை தன் வாழ்வை அர்ப்பணித்துள்ளார் என்பதை, அவருடன் மேற்கொண்ட சந்திப்பில் தான் உணர்ந்ததாக, கானடா நாட்டுப் பிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். மே 29, இத்திங்களன்று கானடா நாட்டுப் பிரதமர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, 36 நிமிடங்கள் உரையாடியபின், உரோம் நகரில் உள்ள வில்லா போர்கேசே பூங்காவில் செய்தியாளர்களிடம் தன் அனுபவங்களை, பகிர்ந்துகொண்ட வேளையில் இவ்வாறு கூறினார் என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது. கானடா நாட்டில் வாழும் பழங்குடியினருடன், தங்கள் நாடு முழுமையான ஒப்புரவை அடைவதற்கு, கத்தோலிக்கத் திருஅவை பெரும் பங்கு வகிக்கமுடியும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தபோது, கானடா நாட்டு ஆயர்களுடனும், அரசுடனும் சேர்ந்து, அம்முயற்சிகளை எடுக்க, திருத்தந்தை விருப்பம் தெரிவித்ததாக பிரதமர் ட்ரூடோ அவர்கள் கூறினார். இந்த ஒப்புரவின் ஒரு முக்கிய முயற்சியாக, கத்தோலிக்கத் திருஅவை சார்பில் பழங்குடியினரிடம் மன்னிப்பு கேட்பதற்கு திருஅவை முன்வரவேண்டும் என்பதையும், திருத்தந்தை தங்கள் நாட்டுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பதையும், திருத்தந்தையிடம் விண்ணப்பங்களாக முன்வைத்ததாக கானடா நாட்டுப் பிரதமர் கூறினார். கத்தோலிக்கரான கானடா பிரதமர் ட்ரூடோ அவர்களும், கானடா ஆயர்களும் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புலம்பெயர்ந்தோருக்கு வரவேற்பு ஆகிய முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி
See More
மரியன்னை குறித்து திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
"இறைவனின் இரக்கத்திற்கு வாழும் சாட்சிகளாக மாறும்வண்ணம், அன்னை மரியாவின் உறுதியான, உதவி செய்யும் நம்பிக்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்" என்ற சொற்கள், மே 31, இப்புதனன்று, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன. மரியன்னையின் வணக்க மாதமான மே மாதத்தின் இறுதி நாளையும், மே 31ம் தேதி, கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்தத் திருநாளையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார். @pontifex என்ற முகவரியில், திருத்தந்தை ஒவ்வொரு நாளும் வெளியிடும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், இஸ்பானியம், ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஜெர்மனி, இலத்தீன், போலந்து, அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் உலகினரைச் சென்றடைகின்றன. மே 31, இப்புதன் முடிய, திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1,213 என்பதும், அவரது செய்திகளை ஆர்வமாய்த் தொடர்வோர் 1 கோடியே 7 இலட்சத்து, 87,238 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கன. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
காபூல் தாக்குதலுக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில், இப்புதனன்று நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோர், மற்றும் காயமுற்றோர் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்தியொன்றை அனுப்பியுள்ளார். இறந்தோர் நிறையமைதி பெறுவதற்கும், காயமுற்றோர் நலமடைவதற்கும், ஆப்கானிஸ்தான் நாடு அமைதியுடன் வாழ்வதற்கும் தன் செபங்களை அர்ப்பணிப்பதாக, திருத்தந்தை கூறியுள்ள இத்தந்தியை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார். மே 31, இப்புதனன்று காலை, ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில், அரசுத்தலைவர் மாளிகைக்கும், ஜெர்மன் தூதரகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில், நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில், குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 300க்கும் அதிகமானோர் காயமுற்றனர் என்றும் ஊடகங்கள் கூறியுள்ளன. கழிவு நீர் ஏற்றிவரும் லாரி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில், சாலையில் சென்றுகொண்டிருந்த ஆப்கானிஸ்தான் மக்களே அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இரமதான் மாதத் துவக்கத்தில் நிகழ்ந்துள்ள இத்தாக்குதலுக்கு, இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், தாக்குதலின் காரணமும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
வட கொரியாவிற்கு உதவ விரும்பும் தென்கொரியா
வட கொரியாவில் துன்புறும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தங்களை தயாரிக்கும்படி, தென்கொரியாவின் சமூக மற்றும் கிறிஸ்தவ குழுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தென்கொரியாவின் புதிய அரசுத் தலைவர். திருத்தந்தையின் பிரதிநிதி, பேராயர் Hyginus Kim Hee-joong அவர்களை அரசு மாளிகையில் சந்தித்து உரையாடிய புதிய அரசுத் தலைவர் Moon Jae-in அவர்கள், வட கொரிய மக்களுக்கு உதவ வேண்டிய தென் கொரியாவின் கடமை குறித்தும், இரு நாடுகளுக்குமிடையே அமைதியை உருவாக்கவேண்டிய தேவை குறித்தும் தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். வடகொரிய அரசுத் தலைவர் அமைதிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், அந்நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தான் எப்போதும் தயாராக இருப்பதாக, ஏற்கனவே தென்கொரிய அரசுத் தலைவர் Moon Jae-in அவர்கள், திருத்தந்தைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. வட கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்குவதில் அதிக ஆர்வம் காட்டிவரும் தென் கொரியாவின் புதிய அரசுத் தலைவர், அதன் முதல்படியாக, வட கொரியாவிற்கு சமூக மற்றும் மத அமைப்புக்கள் வழியாக பொருளாதார உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளார். வடகொரியாவிற்கு எதிராக, அனைத்துலக சமுதாயம் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை மீறாமல், இந்த உதவிகள் ஆற்றப்படும் எனவும், தென் கொரிய அரசு அறிவித்துள்ளது. ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி
See More
சேதமாக்கப்பட்ட அன்னை மரி ஆலயத்தை புதுப்பிக்கும் முயற்சிகள்
தெலுங்கானாவில் பாத்திமா அன்னை ஆலயம் ஒன்று சில விஷமிகளால் தாக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டதற்கு பரிகாரமாக, ஆன்மீக திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார், அம்மாநிலத்தின் ஹைதராபாத் பேராயர். இம்மாதம் 21ம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் Keesaraவிலுள்ள, பாத்திமா அன்னை ஆலயத்திற்குள் நுழைந்த மத அடிப்படைவாதிகள், அங்குள்ள திரு உருவச்சிலைகளையும் ஏனைய பொருட்களையும் சேதமாக்கியுள்ளது பற்றி தன் அறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ள ஹைதராபாத் பேராயர் தும்மா பாலா அவர்கள், ஜூன் மாதம் 9ம் தேதி பாத்திமா அன்னை கோவில் சுத்திகரிப்பு சடங்கு இடம்பெறுவதற்கு தெலுங்கானா மாநிலத்தின் அனைத்துக் கோவில்களிலும் ஒரு நாள் திருநற்கருணை ஆராதனையும், அதற்கு அடுத்த நாள் செபமாலை செபித்தலும் இடம்பெறும் என அறிவித்துள்ளார். அரசு அதிகாரிகளின் அனுமதி கேட்டு, தனியார் நிலத்தில், அவரின் விருப்பத்துடன் கட்டப்பட்ட அன்னை மரிக் கோவிலுக்குள் புகுந்த மத அடிப்படைவாதிகள், கோவிலின் உட்பகுதியை திட்டமிட்டே சேதப்படுத்தியுள்ளனர். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More