உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

திருச்சபை செய்திகள்

விளிம்பு மக்களுக்காக வாழும் திருத்தந்தை - கானடா பிரதமர்
சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுக்காக திருத்தந்தை தன் வாழ்வை அர்ப்பணித்துள்ளார் என்பதை, அவருடன் மேற்கொண்ட சந்திப்பில் தான் உணர்ந்ததாக, கானடா நாட்டுப் பிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார். மே 29, இத்திங்களன்று கானடா நாட்டுப் பிரதமர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, 36 நிமிடங்கள் உரையாடியபின், உரோம் நகரில் உள்ள வில்லா போர்கேசே பூங்காவில் செய்தியாளர்களிடம் தன் அனுபவங்களை, பகிர்ந்துகொண்ட வேளையில் இவ்வாறு கூறினார் என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது. கானடா நாட்டில் வாழும் பழங்குடியினருடன், தங்கள் நாடு முழுமையான ஒப்புரவை அடைவதற்கு, கத்தோலிக்கத் திருஅவை பெரும் பங்கு வகிக்கமுடியும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தபோது, கானடா நாட்டு ஆயர்களுடனும், அரசுடனும் சேர்ந்து, அம்முயற்சிகளை எடுக்க, திருத்தந்தை விருப்பம் தெரிவித்ததாக பிரதமர் ட்ரூடோ அவர்கள் கூறினார். இந்த ஒப்புரவின் ஒரு முக்கிய முயற்சியாக, கத்தோலிக்கத் திருஅவை சார்பில் பழங்குடியினரிடம் மன்னிப்பு கேட்பதற்கு திருஅவை முன்வரவேண்டும் என்பதையும், திருத்தந்தை தங்கள் நாட்டுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பதையும், திருத்தந்தையிடம் விண்ணப்பங்களாக முன்வைத்ததாக கானடா நாட்டுப் பிரதமர் கூறினார். கத்தோலிக்கரான கானடா பிரதமர் ட்ரூடோ அவர்களும், கானடா ஆயர்களும் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புலம்பெயர்ந்தோருக்கு வரவேற்பு ஆகிய முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி
See More
மரியன்னை குறித்து திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
"இறைவனின் இரக்கத்திற்கு வாழும் சாட்சிகளாக மாறும்வண்ணம், அன்னை மரியாவின் உறுதியான, உதவி செய்யும் நம்பிக்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்" என்ற சொற்கள், மே 31, இப்புதனன்று, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன. மரியன்னையின் வணக்க மாதமான மே மாதத்தின் இறுதி நாளையும், மே 31ம் தேதி, கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்தத் திருநாளையும் இணைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார். @pontifex என்ற முகவரியில், திருத்தந்தை ஒவ்வொரு நாளும் வெளியிடும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், இஸ்பானியம், ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஜெர்மனி, இலத்தீன், போலந்து, அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் உலகினரைச் சென்றடைகின்றன. மே 31, இப்புதன் முடிய, திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1,213 என்பதும், அவரது செய்திகளை ஆர்வமாய்த் தொடர்வோர் 1 கோடியே 7 இலட்சத்து, 87,238 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கன. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
காபூல் தாக்குதலுக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில், இப்புதனன்று நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோர், மற்றும் காயமுற்றோர் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்தியொன்றை அனுப்பியுள்ளார். இறந்தோர் நிறையமைதி பெறுவதற்கும், காயமுற்றோர் நலமடைவதற்கும், ஆப்கானிஸ்தான் நாடு அமைதியுடன் வாழ்வதற்கும் தன் செபங்களை அர்ப்பணிப்பதாக, திருத்தந்தை கூறியுள்ள இத்தந்தியை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார். மே 31, இப்புதனன்று காலை, ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில், அரசுத்தலைவர் மாளிகைக்கும், ஜெர்மன் தூதரகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில், நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில், குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 300க்கும் அதிகமானோர் காயமுற்றனர் என்றும் ஊடகங்கள் கூறியுள்ளன. கழிவு நீர் ஏற்றிவரும் லாரி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில், சாலையில் சென்றுகொண்டிருந்த ஆப்கானிஸ்தான் மக்களே அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இரமதான் மாதத் துவக்கத்தில் நிகழ்ந்துள்ள இத்தாக்குதலுக்கு, இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், தாக்குதலின் காரணமும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
வட கொரியாவிற்கு உதவ விரும்பும் தென்கொரியா
வட கொரியாவில் துன்புறும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தங்களை தயாரிக்கும்படி, தென்கொரியாவின் சமூக மற்றும் கிறிஸ்தவ குழுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தென்கொரியாவின் புதிய அரசுத் தலைவர். திருத்தந்தையின் பிரதிநிதி, பேராயர் Hyginus Kim Hee-joong அவர்களை அரசு மாளிகையில் சந்தித்து உரையாடிய புதிய அரசுத் தலைவர் Moon Jae-in அவர்கள், வட கொரிய மக்களுக்கு உதவ வேண்டிய தென் கொரியாவின் கடமை குறித்தும், இரு நாடுகளுக்குமிடையே அமைதியை உருவாக்கவேண்டிய தேவை குறித்தும் தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். வடகொரிய அரசுத் தலைவர் அமைதிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், அந்நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தான் எப்போதும் தயாராக இருப்பதாக, ஏற்கனவே தென்கொரிய அரசுத் தலைவர் Moon Jae-in அவர்கள், திருத்தந்தைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. வட கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்குவதில் அதிக ஆர்வம் காட்டிவரும் தென் கொரியாவின் புதிய அரசுத் தலைவர், அதன் முதல்படியாக, வட கொரியாவிற்கு சமூக மற்றும் மத அமைப்புக்கள் வழியாக பொருளாதார உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளார். வடகொரியாவிற்கு எதிராக, அனைத்துலக சமுதாயம் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை மீறாமல், இந்த உதவிகள் ஆற்றப்படும் எனவும், தென் கொரிய அரசு அறிவித்துள்ளது. ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி
See More
சேதமாக்கப்பட்ட அன்னை மரி ஆலயத்தை புதுப்பிக்கும் முயற்சிகள்
தெலுங்கானாவில் பாத்திமா அன்னை ஆலயம் ஒன்று சில விஷமிகளால் தாக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டதற்கு பரிகாரமாக, ஆன்மீக திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார், அம்மாநிலத்தின் ஹைதராபாத் பேராயர். இம்மாதம் 21ம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் Keesaraவிலுள்ள, பாத்திமா அன்னை ஆலயத்திற்குள் நுழைந்த மத அடிப்படைவாதிகள், அங்குள்ள திரு உருவச்சிலைகளையும் ஏனைய பொருட்களையும் சேதமாக்கியுள்ளது பற்றி தன் அறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ள ஹைதராபாத் பேராயர் தும்மா பாலா அவர்கள், ஜூன் மாதம் 9ம் தேதி பாத்திமா அன்னை கோவில் சுத்திகரிப்பு சடங்கு இடம்பெறுவதற்கு தெலுங்கானா மாநிலத்தின் அனைத்துக் கோவில்களிலும் ஒரு நாள் திருநற்கருணை ஆராதனையும், அதற்கு அடுத்த நாள் செபமாலை செபித்தலும் இடம்பெறும் என அறிவித்துள்ளார். அரசு அதிகாரிகளின் அனுமதி கேட்டு, தனியார் நிலத்தில், அவரின் விருப்பத்துடன் கட்டப்பட்ட அன்னை மரிக் கோவிலுக்குள் புகுந்த மத அடிப்படைவாதிகள், கோவிலின் உட்பகுதியை திட்டமிட்டே சேதப்படுத்தியுள்ளனர். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
எங்கும் பணியாற்ற எப்போதும் தயாராக இருத்தல்
தான் பணியாற்றும் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல எப்போதும் தயாராக இருப்பவராக ஒரு அருள்பணியாளர் இருக்கவேண்டும், ஏனெனில் வரலாற்றின் மையம் அவரல்ல என்றும், அவர் சுதந்திரமானவர் என்பதை அவர் அறிவார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எந்த தீமைகளோடும் உடன்பாடு கொள்ளாமல், இறைவன் அனுப்பும் இடத்திற்கு பணியாற்றச்செல்ல தான் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று, தன் மந்தையிடமிருந்து தனக்கான எவ்வித எதிர்பார்ப்புமின்றி வாழும் சுதந்திர மனிதராகிய மேய்ப்பருக்குத் தெரியும் என உரைத்தார். இச்செவ்வாய்க்கிழமை திருப்பலியின் முதல் வாசகமாகிய, திருத்தூதர் பணிகள் நூலில், புனித பவுல், தூய ஆவியாரின் கட்டளைக்கிணங்க தான் எருசலேமுக்குச் செல்வதாக கூறியதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, ஒவ்வொரு மேய்ப்பரின் பணியும் எப்போதும் முழுமையடைந்ததாக இருக்கவேண்டும், பாதியில் விட்டுச் செல்வதாக அல்ல, என்றார். மந்தையுடன் ஒரு மேய்ப்பர் கொள்ளும் பிணைப்பு, இயேசுவின் சிலுவையால் சுத்திகரிக்கப்பட்டதாக இருக்கும்போது, அதனை விட்டுவிட்டு மற்றொரு இடத்திற்கு பணியாற்றச் செல்வது, இலகுவானதாக இருக்கும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். எந்த ஒரு மேய்ப்பரும், தீயவைகளோடு உடன்பாடு கொள்ளாதவராகவும், அனுப்பப்படும் இடங்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி கீழ்ப்படிதலுடன் செல்பவராகவும், தன் வாழ்வுக்கு முக்கியத்துவம் தராதவராகவும் செயல்படவேண்டும் என மூன்று விதிகளை தன் மறையுரையில் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் மேய்ப்பர்களாகிய அருள்பணியாளர்கள், ஆயர்கள், திருத்தந்தை என அனைவருக்காகவும் செபிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
நேர் மறை எண்ணங்கள் விதைக்கப்படுவது, இன்றியமையாதது
சமூகத் தொடர்புத்துறை, நேர்மறை எண்ணங்களை அதிகம் அதிகமாக பரப்பவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்துவருவதை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், பாகிஸ்தான் நாட்டின் வானொலி நிலைய இயக்குனர் ஒருவர். இன்றைய உலகில் கொலைகளும் பயங்கரவாதங்களும் குறித்த செய்திகளே, தகவல் துறையில் முதலிடத்தை வகிக்கின்றன, வளர்ச்சி மற்றும் நற்செயல்கள் குறித்தவை பின்னுக்குத் தள்ளப்படுகின்றன என்று கூறிய, பாகிஸ்தான் வானொலி நிலைய இயக்குனர் Syed Khalid Waqar அவர்கள், அனைத்து நிகழ்வுகளும் வியாபார கண்ணோட்டதில் நோக்கப்பட்டு, குண்டுவீச்சு தாக்குதல்கள்கூட, இலாபம் தரும் செய்திகளாக மாறும்போது, சமூக மதிப்பீடுகள் அழிக்கப்பட்டு, எதிர்மறை எண்ணங்கள் மக்களின் மனங்களில் உருவாக காரணமாகிறது என்றார். பாகிஸ்தான் கத்தோலிக்கர்களால் இலாகூரில் ஏற்பாடுச் செய்யப்பட்ட சமுகத் தொடர்பு நாள் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய இஸ்லாமியரான Khalid Waqar அவர்கள், திருத்தந்தை காட்டும் வழியில் நேர் மறை எண்ணங்களை விதைப்பது, ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இன்றியமையாதது எனவும் கூறினார். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
செபத்தில் பரிந்துரைப்பது, பிறரன்பு நடவடிக்கை
அனைத்தையும் இறைவனிடம் கொணர்ந்து அவரின் பாதுகாப்பில் ஒப்படைப்பதை நோக்கம் கொண்டுள்ளதால், செபம் என்ற பரிந்துரையானது, அமைதியை அல்ல, மாறாக, பிறரன்பை உள்ளடக்கியதாக உள்ளது என இத்தாலியின் ஜெனோவா நகரில் இச்சனிக்கிழமை மாலை திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். தன் விண்ணேற்பின் வழியாக விண்ணையும் மண்ணையும் இணைத்த இறைவன் இயேசு, நமக்காக சோர்வின்றி, தந்தையிடம் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, அதேபோல் கிறிஸ்தவர்களும் மற்றவர்களுக்காக பரிந்து பேசுவதை செபத்தில் உள்ளடக்கும்போது, அது பிறரன்பு செயலாகிறது என்றார். ஜெனோவாவின் கென்னடி சதுக்கத்தில் திருப்பலி நிறைவேற்றுவதற்கு முன்னர் அந்நகரின் ஜியான்னினா கஸ்லினி மருத்துவ மனையில் சிறார்களை சந்தித்து அவர்களோடு உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு பணியாற்றுவோரிடமும், பிறரன்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்தரைத்தார். கடலை நோக்கியிருந்த கென்னடி வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, நமக்காகப் பரிந்துரைத்துக் கொண்டிருக்கும் இயேசு, நாம் குறையுடையவர்களாக இருப்பினும் நம் மீது நம்பிக்கை வைத்து, அவர் பணியை தொடர்ந்து நடத்த நம்மை அனுப்பி வைக்கிறார் என்றார். இறைவனின் பலத்தில் நம்பிக்கை வைத்து, தூய ஆவியார் வழங்கும் வல்லமையின் துணைகொண்டு நாம் நற்செய்தியை உலகிற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியை எடுத்துரைக்காமல் சோம்பித் திரிவது கிறிஸ்தவரால் இயலாது எனவும் கூறினார். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
நற்செய்தியை அறிவிப்பது கடமை மட்டுமல்ல, கௌரவமும்கூட‌
மனித குலமனைத்தும் நற்செய்தியைப் பெறவேண்டும் என்ற நோக்குடன் செயலாற்றுவதே, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் இருக்கும் கடமை, மற்றும் உயரிய அங்கீகாரம் என இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அல்லேயா வாழ்த்தொலி உரைக்கு செவிமடுக்க வத்திக்கானின் தூய பேதுரு பேராலய வளாகத்தில் இஞ்ஞாயிறு கூடியிருந்த மக்களுக்கு, இயேசு, விண்ணகத்திற்கு எழுந்துசென்ற திருவிழாவின் மையப்பொருளுடன் உரையாற்றிய திருத்தந்தை, இயேசு கிறிஸ்துவின் அன்பையும் அக்கறையையும் மனித குலத்திற்கு அறிவிக்க வேண்டியது நம்மை சார்ந்துள்ளது, எனினும், அதற்கு தூய ஆவியாரின் துணை இன்றியமையாதது எனவும் எடுத்துரைத்தார். முதன்முதலில் சீடர்களை அழைத்து ஒரு சிறிய குடும்பமாக உருவாக்கிய அந்த கலிலேயாவிலிருந்து இயேசு விண்ணகம் ஏறிச் சென்றார் என்பதை நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தந்தை வழங்கிய பணியை இயேசு நிறைவுக்குக் கொணர்ந்துள்ள இந்த விண்ணேற்பு நேரத்தில்தான், நற்செய்தியை உலகுக்கு எடுத்துச் செல்லும் நம் பணி துவங்குகின்றது எனவும் கூறினார். பாடுகளையும் மரணத்தையும் கண்டதால் அச்சத்திலிருந்த சீடர் கூட்டத்திடமே நற்செய்தி அறிவிக்கும் பணியை விட்டுச்செல்கிறார் இயேசு, ஏனெனில் இவ்வுலகில் இனிமேல் இயேசுவின் பணியை தொடர்ந்து எடுத்துச் செல்லவேண்டியவர்கள் அவரின் சீடர்களே எனவும் உரைத்தார் திருத்தந்தை. உயிர்த்த இயேசுவின் துணைகொண்டும், தூய ஆவியாரின் வழிகாட்டுதலுடனும் நற்செய்தியை உலகின் எல்லை வரை, உலகம் முடியும் வரை எடுத்துச் செல்லவேண்டிய கிறிஸ்தவர்களின் கடமையையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
திருத்தந்தையுடன் கானடா பிரதமர்
இத்திங்களன்று காலை, கானடா பிரதமர் Justin Trudeau அவர்கள், திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார். தன் மனைவி Sophie Gregoire-Trudeau அவர்களுடனும், அரசு உயர் மட்ட குழுவினருடனும், திங்களன்று காலை நண்பகல் 12 மணி 45 நிமிடங்களுக்கு திருப்பீடம் வந்த கானடா பிரதமர், திருத்தந்தையை தனியாக சந்தித்து உரையாடி, பின்னர் திருத்தந்தையுடன், தனியாகவும், தன் மனைவியுடனும், அரசுக் குழுவினருடனும் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். திருத்தந்தையுடன் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்து உரையாடினார், கானடா பிரதமர் Justin Trudeau . கானடா பூர்வீக இன மக்களுக்குரிய பணிகள், தட்பவெப்ப நிலை மாற்றங்கள் குறித்தவற்றில் ஒன்றிணைந்து போராடுதல், மத மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை போன்ற விவகாரங்கள், இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More