உங்களுக்குத் தெரியுமா ?
வேரித்தாஸ் நிகழ்ச்சிகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 மணிநேரமும், 7 நாட்களிலும் இணையத்தளத்திலும் அன்ராய்டு மொபைலிலும் கேட்கலாம். அன்ராய்டு மொபைல் பயன்பாட்டினைப் பதிவிறக்கம் செய்ய RVA MOBILEஎன டைப் செய்யவும்

திருச்சபை செய்திகள்

திறமையான தொழிலதிபர், ஆதாயத்தை மட்டும் தேடும் வர்த்தகர் அல்ல
ஒரு திறமையான தொழிலதிபர், படைப்பாற்றல்திறன், தொழில் மீது அன்பு, தனது பணி மற்றும், பணியாளர்கள் மீது பற்று, பணியாளர்களின் பண்புகளை அறிதல் போன்ற திறமைகளைக் கொண்டவராக இருக்க வேண்டும் என்று, இச்சனிக்கிழமை காலையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்தாலியின் வடமேற்கிலுள்ள துறைமுக நகரமான ஜெனோவாவிற்கு, ஒருநாள் மேய்ப்புப்பணி பயணத்தை, இச்சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு, வத்திக்கானிலிருந்து தொடங்கிய திருத்தந்தை, 8.15 மணிக்கு ஜெனோவா நகரை அடைந்து, முதலில், அந்நகரின் ILVA இரும்பு தொழிற்சாலையில், தொழிலாளர்களைச் சந்தித்தார். சிறிய மின்சார வாகனத்தில் அத்தொழிற்சாலையைப் பார்வையிட்ட பின், அங்கு நடந்த சந்திப்பில், ஒரு தொழிலதிபர், தொழிலாளர் குழுவின் ஒரு பிரதிநிதி, ஒரு தொழிலாளர், வேலையின்றி இருக்கும் ஒருவர் என, நான்கு பேர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னார். கப்பல்களைப் பழுதுபார்க்கும் தொழிலை நடத்தும் ஃபெர்னாந்தோ கார்ரே என்பவர் கேட்ட கேள்விக்கு முதலில் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திறமையான தொழிலதிபரின் பண்புகள் மற்றும், தொழிலின் மேன்மை குறித்து நீண்ட விளக்கம் அளித்தார். ஒருகாலத்தில் தனது தந்தை, அர்ஜென்டீனாவுக்கு புலம்பெயர்ந்தபோது, ஜெனோவா நகர் வழியே சென்றதைக் குறிப்பிட்டு, அந்நகருக்கு முதல்முறையாக தான் வந்துள்ளது குறித்து மகிழ்வதாகத் தெரிவித்த திருத்தந்தை, இக்காலத்தில் தொழில் அச்சுறுத்தலில் உள்ளது, தொழிலையும், தொழிலாளரையும் மாண்புடன் கருதாத ஓர் உலகில் வாழ்கிறோம், தொழில் உலகம் மனிதருக்கு முன்னுரிமை கொடுப்பதாய் உள்ளது, எனவே, இது கிறிஸ்தவரின், திருத்தந்தையின் முன்னுரிமையாகும் என்று கூறினார். நீ நிலத்தில் உழைத்து, அதை ஆளுவாயாக என்பதே, கடவுள் ஆதாமுக்கு அளித்த முதல் கட்டளை எனவும், தொழிலாளரான இயேசு தொடங்கி, திருஅவைக்கும், தொழிலுக்கும் இடையே எப்போதும் நட்புறவு நிலவுகின்றது எனவும் கூறிய திருத்தந்தை, ஓர் உண்மையான தொழிலதிபர், முதலில், தான் ஒரு பணியாளர் என்பதை மறக்கக்கூடாது, அதேநேரம், தன் பணியாளர்களின் பண்புகளையும் நன்கு அறிந்தவராய் இருக்கவேண்டும் எனத் தெரிவித்தார். ஒருவரை வேலையிலிருந்து நீக்குவது தொழிலதிபருக்கு மிகவும் வேதனையளிக்கும் எனவும், ஓராண்டிற்கு முன்னர், ஒருநாள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், திருப்பலியின் இறுதியில், ஒரு தொழிலதிபர், தன்னிடம் வந்து அழுது கண்ணீர் சிந்தியதையும் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, இக்காலப் பொருளாதாரத்தில் காணப்படும் நோய் பற்றியும் பேசினார். தொழிலதிபர், இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு முதலீடு செய்பவராக இருக்கக் கூடாது, ஏனெனில், இவ்வாறு செயல்படும் வர்த்தகர் தனது நிறுவனத்தையும், தன் பணியாளர்களையும் அன்புகூர மாட்டார், மாறாக, ஆதாயத்தை மட்டுமே கருத்தில் கொண்டிருப்பார் என்றும், ஆனால், சிலவேளைகளில், அரசியல் அமைப்பு, இத்தகைய வர்த்தகர்களையே ஊக்குவிப்பதுபோல் தெரிகின்றது என்றும், திருத்தந்தை கூறினார். இந்தத் தொழிற்சாலையில் இச்சந்திப்பு நடந்தது குறித்து தான் மகிழ்வதாகவும், ஏனென்றால், இத்தகைய இடங்களும், இறைமக்களின் இடங்கள் எனவும், தொழில் உலகம், கடவுளின் மக்களின் உலகம் எனவும், பணியிடங்கள் நடைபெறும் கலந்துரையாடல்கள், ஏனைய உரையாடல்களைவிட எவ்விதத்திலும் குறைந்தவை அல்ல எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். வேலையின்றி இருக்கும் குடும்பத்தில் விழாக்கள் இல்லை என, வேலையின்றி இருக்கும்நிலை குறித்த தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, வேலைசெய்வதால், நாம் மனிதர் என்ற உணர்வை அதிகம் பெறுகிறோம், இதனால், மனித சமுதாயம் வளமையடைகிறது, வேலைசெய்வதால் மட்டுமே இளையோர் வயது வந்தவர்கள் ஆகிறார்கள், மனிதரின் வேலை, படைப்புத்தொழிலில் பங்கெடுப்பதாக, அது ஒவ்வொரு நாளும் தொடர்கின்றது என திருஅவையின் சமூகக் கோட்பாடு நோக்குகின்றது என்றும், ஜெனோவா இரும்புத் தொழிற்சாலை பணியாளர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். எல்லா தொழில்களும் நல்லவையல்ல, ஏனென்றால், பாலியல் வர்த்தகம், ஆயுத வர்த்தகம், சூதாட்டம், போன்ற தீய தொழில்களும் உள்ளன எனவும் கூறியத் திருத்தந்தை, ஒருவர் வேலை செய்யாதபோது, மோசமாகச் செய்யும்போது, குறைவாகச் செய்யும்போது அல்லது அதிகமாகச் செய்யும்போது, நாட்டின் சனநாயகம் நெருக்கடிக்கு உள்ளாகின்றது எனவும் எச்சரித்தார். இச்சந்திப்பு முடிந்து, ஜெனோவா, புனித இலாரன்ஸ் பேராலயத்தில், ஆயர்கள், அருள்பணியாளர
See More
பிணையக் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு கர்தினால் கெவேதொ
பிலிப்பீன்ஸ் நாட்டின் மராவி நகரிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அருள்பணியாளரையும், கத்தோலிக்கர்களையும் விடுதலை செய்யுமாறு, அந்நாட்டு திருஅவை அதிகாரிகள், இஸ்லாமியப் புரட்சியாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். இச்செவ்வாயன்று, மிந்தனாவோ தீவிலுள்ள மராவி நகர் பேராலயத்திற்குள் நுழைந்த இஸ்லாமியப் புரட்சியாளர்கள், அங்கு செபித்துக்கொண்டிருந்த 15 கத்தோலிக்கர்களையும், அப்பேராலயத்திற்கு அருகிலுள்ள ஆயர் இல்லத்திலிருந்த முதன்மைக் குருவையும் கடத்திச் சென்றதுடன், ஆயர் இல்லத்தையும் பேராலயத்தையும் தீயிட்டுக் கொளுத்திச் சென்றுள்ளனர். இஸ்லாம் போதிப்பது போன்று, இந்த அப்பாவி மக்களுக்கு எவ்விதத் தீங்கும் செய்யமால், இவர்களைப் பாதுகாப்பாக விடுதலை செய்யுமாறு, கடத்தியவர்களின் மனசாட்சிக்கு விண்ணப்பிப்பதாகக் கூறியுள்ளார், அந்நாட்டு கர்தினால் ஒர்லாந்தோ கெவேதொ. இப்பிணையக் கைதிகளின் விடுதலைக்காகச் செபித்த கர்தினால் கெவேதொ அவர்கள், அன்பான இறைவன், மராவி மக்களைப் பாதுகாக்குமாறும் செபித்தார். இதற்கிடையே, தங்கள் மீதான தாக்குதல்களை இராணுவம் கைவிடவில்லையெனில், தங்களால் கடத்தி வைக்கப்பட்டுள்ள அருள்பணியாளர் Sogaun Dewatering மற்றும், ஏனைய 15 கத்தோலிக்கர்களை, கொலை செய்யவுள்ளதாக, இஸ்லாமியப் புரட்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஆதாரம் : CNA/EWTN /வத்திக்கான் வானொலி
See More
அப்பாவி மக்கள், போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவதை...
அப்பாவி குடிமக்களை, போர் ஆயுதங்களாகப் பயன்படுத்துவது, மனிதரின் நடத்தையில் காணப்படும் மிகவும் அருவருப்பான செயல் என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் உரையாற்றினார். ஆயுத மோதல்களில், குடிமக்கள் பாதுகாக்கப்படுதல் மற்றும், நலவாழ்வு என்ற தலைப்பில், ஐ.நா. பாதுகாப்பு அவை நடத்திய உரையாடலில், இவ்வியாழனன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார். ஆயுத மோதல்கள் இடம்பெறும் இடங்களில், குடிமக்களுக்குப் பாதுகாப்பு குறைவு என்பது மட்டுமல்ல, அவர்கள், மோதல்களில், ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்து வருகின்றது என்று திருப்பீடம் நம்புவதாகத் தெரிவித்தார், பேராயர் அவுசா. ஆயுத மோதல்களில் பயன்படுத்தப்படும் நவீன ஆயுதங்களும், தொழில்நுட்பமும், அப்பாவி குடிமக்களைக் குறிவைக்கின்றன என்றும், பெரும் அழிவை ஏற்படுத்தாத ஆயுதங்கள் என்ற பெயரில், தற்போது பயன்படுத்தப்படும், நவீனமயமாக்கப்பட்ட ஆயுதங்கள், பெரும் அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை ஒத்ததாய் இருக்கும் நிலையைக் காண முடிகின்றது என்றும், தன் உரையில் குறிப்பிட்டார், பேராயர் அவுசா. அப்பாவி குடிமக்கள், போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவதைத் தடை செய்வதற்கு, பன்னாட்டு சமுதாயம் ஆவன செய்யுமாறும் வலியுறுத்தினார், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
திருத்தந்தை : எல்லைகளற்ற மறைப்பணியாளர்களாகச் செயல்படுங்கள்
அனைவருக்கும், சிறப்பாக, ஏழைகளுக்கு, எல்லைகளற்ற மறைப்பணியாளர்களாகச் செயல்படுங்கள் என, பிறரன்பு மறைப்பணியாளர்கள் சிறிய அருள் சகோதரிகள் சபையினரிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். இப்பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையின் 12வது பொதுப்பேரவையில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சபையினர் ஆற்றிவரும் பல்வேறு திருத்தூதுப் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார். இச்சபை சகோதரிகள், கிறிஸ்துவின் சதையை ஏழைகளில் நினைவுகூர சிறப்பாக அழைப்புப் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இயேசுவாகிய நற்செய்தியின் மகிழ்வையும், கிறிஸ்துவின் இரக்கம்நிறை திருமுகத்தில், கடவுளின் அன்பு வெளிப்படுத்தப்படுவதன் அழகையும், இச்சகோதரிகள் அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஏழைகள், வயது முதிர்ந்தோர், உடலளவிலும், மனத்தளவிலும் பாதிக்கப்பட்ட நோயாளர் என, சமுதாயத்தில் பல்வேறு விதமான மக்களுடன் உடனிருந்து, உரையாடி, அவர்களுக்கு உதவிபுரிவதாக, இச்சகோதரிகளின் மறைப்பணி அமைந்துள்ளது என்றும், இந்த மறைப்பணி தரும் நற்செய்தியின் மகிழ்வு, திருடப்பட்டுவிடாதபடிக்குக் கவனமாக இருக்குமாறும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார். திருஅவையில் மறைப்பணி, கிறிஸ்துவைச் சந்திப்பதிலிருந்து பிறந்தது என்றும், ஒரு மறைப்பணியாளருக்குத் துணிவும், படைப்பாற்றல்திறனும் இருக்க வேண்டும், அவர், சுதந்திர மனிதராகவும், தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டவராகவும் இருப்பது அவசியம் என்றும் உரையாற்றிய திருத்தந்தை, ஒரு மறைப்பணியாளர், இரக்கத்தின் இறைவாக்கினராகச் செயல்படுவது முக்கியம் எனவும் கூறினார். அருள்பணி ஓரியோனே அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஏனைய நிறுவனங்கள் மற்றும், இயக்கங்களுடன் இணைந்து செயல்பட, இச்சபையினரை ஊக்கப்படுத்திய திருத்தந்தை, இச்சபையினர் ஏழைகளுக்கு ஆற்றிவரும் எடுத்துக்காட்டான பணிகளில் அன்னை மரியா உதவிபுரிவாராக என்றும் கூறி, தனது உரையை நிறைவு செய்தார். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
திருத்தந்தை, யூத சீர்திருத்த ஒன்றியத் தலைவர் சந்திப்பு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று, யூதமதச் சீர்திருத்த ஒன்றியத்தின் தலைவர் ரபி Rick Jacobs அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார். இன்னும், இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவை கூட்டமைப்பின் தலைவரான கொலம்பியாவின் கர்தினால் Rubén Salazar Gómez அவர்கள் தலைமையிலான, அந்தக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் குழுவினரையும், இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், “நம் சமூகங்களின் வருங்காலத்திற்கு, வாழ்வுக்கு ஆதரவான தெளிவான நடவடிக்கைகள், நம் ஒவ்வொருவரிலும், குறிப்பாக, நிறுவனங்களில் தேவைப்படுகின்றன” என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியில், இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்னும், வருகிற ஜூன் நான்காம் தேதி ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் தூய ஆவியார் பெருவிழா திருப்பலி பற்றி அறிவித்துள்ளார், திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான, பேரருள்திரு குய்தோ மரினி. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் தூய ஆவியார் பெருவிழா திருப்பலி, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், காலை பத்து முப்பது மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சனிக்கிழமையன்று இத்தாலியின் ஜெனோவா நகருக்கு ஒருநாள் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை அறிவிப்பதற்காக உள்ள இடம் உலகம்
இயேசு கிறிஸ்துவை அறிவிப்பதற்காக, கிறிஸ்தவர்களின் இடமாக இருப்பது, இந்த உலகம் என்றும், அதேநேரம், இயேசுவோடு ஒன்றிணைவதற்காக, கிறிஸ்தவர்களின் பார்வை, எப்போதும் விண்ணை நோக்கியதாய் இருக்க வேண்டும் என்றும், இவ்வெள்ளி காலை மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கியத் திருத்தந்தை, திருவிவிலியம் கிறிஸ்தவர்களின் பயணத்திற்கு, மூன்று வார்த்தைகளையும், மூன்று இடங்களையும் குறிப்பிடுகின்றது என்று சொல்லி, அவற்றை விளக்கினார். முதல் வார்த்தை நினைவு என்றும், உயிர்பெற்றெழுந்த இயேசு தம் சீடர்களை கலிலேயாவுக்குப் போகச் சொன்னார், இங்கு, சீடர்களுக்கு, உயிர்த்த ஆண்டவருடன் முதல் சந்திப்பு நடந்தது என்றும் கூறியத் திருத்தந்தை, நம் ஒவ்வொருவருக்குமே, உயிர்த்த ஆண்டவர் தம் சீடர்களுக்குத் தோன்றிய கலிலேயா உள்ளது, அங்கு நாம் அவரைச் சந்தித்தால், அவரை ஆர்வமுடன் பின்பற்றும் மகிழ்வு கிடைக்கும் என்றும் கூறினார். நல்ல கிறிஸ்தவராக வாழ்வதற்கு, இயேசுவோடு நாம் நடத்திய முதல் சந்திப்பின் நினைவு எப்போதும் நம்மிடம் இருக்க வேண்டும் என உரைத்த திருத்தந்தை, மறைநூல் குறிப்பிடும் இரண்டாவது இடம் விண்ணகம் என்றும், நாம் இவ்வுலகில் இருந்துகொண்டே விண்ணகம் பற்றிய சிந்தனைகளில் வாழ வேண்டும் என்றும் கூறினார். மறைநூல் குறிப்பிடும் மூன்றாவது இடம், உலகம் என்றும், இயேசு விண்ணேற்பு அடையும்முன், நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள் என்று தம் சீடர்களிடம் சொன்னார் என்றும் கூறியத் திருத்தந்தை, நாம் இயேசுவை அறிவிக்கும் இடம், இந்த உலகம் என்று உரைத்தார். நாம் இயேசுவால் மீட்படைந்துள்ளோம், நமக்கு அருளை வழங்கவும், இறைத்தந்தையிடம் நம் அனைவரையும் அழைத்துச் செல்லவும், அவர் இவ்வுலகுக்கு வந்தார் என்ற, இயேசுவின் திருவார்த்தையை அறிவிப்பதற்கு, கிறிஸ்தவர்களுக்குரிய இடம் இந்த உலகம் என, மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். நினைவு, செபம், மறைப்பணி ஆகிய மூன்று வார்த்தைகளும், கலிலேயா, விண்ணகம், உலகம் ஆகிய மூன்று இடங்களுமே கிறிஸ்தவர்களைக் குறித்துக் காட்டும் அடையாளங்கள் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கூறுகளுடன் வாழ்ந்தால், கிறிஸ்தவ வாழ்வு அழகாகவும், மகிழ்வாகவும் அமையும் எனக் கூறினார். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
அருள்பணியாளரை கொலை செய்யவுள்ளதாக புரட்சியாளர்கள் மிரட்டல்
பிலிப்பீன்சின் மராவி நகரிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அருள்பணியாளரையும், கத்தோலிக்க விசுவாசிகளையும் கொல்ல உள்ளதாக எச்சரித்துள்ளனர் இஸ்லாமியத் தீவிரவாதிகள். இச்செவ்வாயன்று, மிந்தனாவோ தீவிலுள்ள மராவி நகர் பேராலயத்திற்குள் நுழைந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள், அங்கு செபித்துக்கொண்டிருந்த 15 கத்தோலிக்க விசுவாசிகளையும், அண்மை ஆயர் இல்லத்திலிருந்த முதன்மைக் குருவையும் கடத்திச் சென்றதுடன், ஆயர் இல்லத்தையும் பேராலயத்தையும் தீயிட்டுக் கொளுத்திச் சென்றுள்ளனர். இத்தாக்குதல் நடந்தபோது, அண்மை பங்குதளத்தினைச் சந்திக்கச் சென்றிருந்த ஆயர் Edwin De la Pena உரைக்கையில், மக்கள் அச்சத்தால் தங்கள் வீடுகளைப் பூட்டிக்கொண்டு இருப்பதாகவும், இஸ்லாமியப் புரட்சியாளர்களுடன் போரிட்டுவரும் பிலிப்பீன்ஸ் இராணுவம், மராவி நகரில் குண்டுவீச்சை நடத்தும் என்ற அச்சமும் நிலவுவதாகவும் தெரிவித்தார். தங்கள் மீதான தாக்குதல்களை இராணுவம் கைவிடவில்லையெனில், தங்களால் கடத்தி வைக்கப்பட்டுள்ள அருள்பணியாளர் Sogaun Dewatering மற்றும், ஏனைய 15 கத்தோலிக்கர்களையும் கொலை செய்யவுள்ளதாக இஸ்லாமியப் புரட்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி
See More
ஆப்ரிக்காவில் பெண்கள், சிறாரின் நிலை குறித்து ஆயர்கள்
ஆப்ரிக்காவின் தென்பகுதியில் பெண்களும் சிறார்களும் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்த அண்மை அறிக்கை மிகவும் வேதனை தருவதாக உள்ளதென, தென்மண்டல ஆப்ரிக்க ஆயர் பேரவை, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. குழந்தைகளும் பெண்களும், அவர்களின் உறவினர்களாலும், அவர்களுக்கு மிகவும் பழக்கமானவர்களாலுமே தவறாக நடத்தப்படுகிறார்கள் என்ற செய்தியும் அதிர்ச்சி தருவதாக உள்ளது என உரைத்துள்ளனர் ஆயர்கள். தெற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஐந்துக்கு ஒரு சிறார், பாலினவகையில் தவறாக நடத்தப்படுவதாகவும், வீடுகளில் பெண்கள் மீதான வன்முறைகள் சர்வ சாதாரணமாக காணப்படுவதாகவும், உரிமை மீறல்களுக்கு, இளவயது குடிப்பழக்கமும் ஒரு காரணமாக இருப்பதாகவும் அண்மை ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர், ஆப்ரிக்காவின் தென்மண்டல ஆயர்கள். நீதித்துறைக்கும், சிறைச்சாலைகளுக்கும் அதிக நிதியை ஒதுக்கும் பழக்கத்திலிருந்து விலகி, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அவற்றைச் செலவிடவேண்டும் எனவும் அரசுகளை விண்ணப்பித்துள்ளனர் ஆயர்கள். ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
70வது Cannes திரைப்பட விழாவில், பேரருள்திரு Viganò
திரைப்படம், சமூகத்தின் எதார்த்தத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்துவதில் முக்கிய அங்கம் வகித்தாலும், அது ஒளியின் எல்லைகளைத் திறந்துவிடும் மற்றொரு நோக்கத்தையும் கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறக்கக் கூடாது என, திருப்பீட ஊடகத் துறை அதிகாரி ஒருவர் கூறினார். “விழாவின் புனித அழகு” என்ற தலைப்பில் இவ்வியாழனன்று நடைபெற்ற, எழுபதாவது Cannes திரைப்பட விழாவில், திரைப்படம், நம்பிக்கையை அறிவிக்கின்றது என்ற தலைப்பில் உரையாற்றிய, திருப்பீட சமூகத் தொடர்பு செயலகத்தின் தலைவர், பேரருள்திரு Dario Edoardo Viganò அவர்கள் இவ்வாறு கூறினார். திரைப்படம், மனிதக் கண்களால் காணமுடியாத இறைவனின் இரக்கத்தை, மனித வரலாற்றில் வெளிக்கொணர முயற்சிக்கின்றது என்றும் உரைத்த பேரருள்திரு Viganò அவர்கள், 2016ம் ஆண்டில் விருதுபெற்ற, Ken Loach அவர்களின் Daniel Blake என்ற திரைப்படம் பற்றிக் குறிப்பிட விரும்புவதாகவும் தெரிவித்தார். மே 28, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் 51வது உலக சமூகத் தொடர்பு நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ஊடகவியலாளர், இக்காலத்திலும், வருங்காலத்திலும் நம்பிக்கையை இழந்துவிடாமல், உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளதையும் குறிப்பிட்டுப் பேசினார், பேரருள்திரு Viganò. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More
பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளில் வாழும் நிலையில் மாற்றம் தேவை
உலகளாவிய பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளில், மனநிலை மற்றும், வாழும் நிலையிலும் மாற்றங்கள் அவசியம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பேரிடர் தடுப்பு குறித்த, ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு செய்தி அனுப்பியுள்ளார். மெக்சிகோ நாட்டின் Cancún நகரில் நடைபெற்றுவரும், பேரிடர் அச்சுறுத்தல்களைக் குறைக்கும் வழிகள் பற்றிய ஐந்து நாள் கருத்தரங்கிற்கு, அதற்கு தலைமை வகிக்கும் மெக்சிகோ அரசுத்தலைவர் Enrique Peña Nieto அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ள, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பேரிடர் தடுப்பு நடவடிக்கைக்கு, மூன்று பரிந்துரைகளை வழங்கியுள்ளார். இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் கடும் மனித, மற்றும் பொருளாதார இழப்புக்களைக் குறைப்பதற்கு, தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய கல்வியறிவும், பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும், பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் மக்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும், இத்தடுப்பு நடவடிக்கைகளில், பேரிடர்களால் அதிகம் தாக்கப்பட்டவர்கள் மற்றும், மிகவும் நலிந்த மக்களின் ஈடுபாடு ஏற்கப்பட வேண்டும் என்று, கர்தினாலின் கடிதம் வலியுறுத்தியுள்ளது. உலகளாவிய பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளில் பங்கேற்க, திருப்பீடம் எப்போதும் தயாராக உள்ளது எனவும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார். மக்கள், தன்னலம் மிகுந்து வாழும்போது பேராசை அதிகரிக்கின்றது, எனவே, கடும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நிகழ்வுகளில் மட்டும் நாம் கவனம் செலுத்தாமல், இயற்கைப் பேரிடர்களால் உண்டாகும் சமூகப் பதட்ட நிலைகள் குறித்தும் கவனம் செலுத்துவது அவசியம் என்றுரைத்துள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றையும், அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார், கர்தினால் பரோலின் Cancún நகரில், மே 22, இத்திங்களன்று ஆரம்பித்த இக்கருத்தரங்கு, மே 26, இவ்வெள்ளியன்று நிறைவடைகின்றது. ஆதாரம் : வத்திக்கான் வானொலி
See More